Economy, business and finance
யு.பி.ஐ.,யில் பணம் பெறும் நிறுவனங்கள், கடைகளுக்கு ரூ.300 வரை கட்டணம்!: தனிநபர்களின் பரிவர்த்தனை இலவசமாக தொடரும்

புதுடில்லி: தேசிய பணப்பரிவர்த்தனை கழகம், யு.பி.ஐ., எனப்படும், டிஜிட்டல் முறையில் பணம் பெறும் வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிப்பதற்கான அறிவிப்பை நேற்று (செப்.,15) வெளியிட்டது.
அதன்படி, '2,000 ரூபாய்க்கு மேல் பணம் பெறும் நிறுவனங்கள், 0.4 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். பரிவர்த்தனை, 75 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் இருந்தாலும் கட்டணம் 300 ரூபாய் என்ற வரம்புக்குள் இருக்கும். ரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் ஆகிய அத்தியாவசிய துறைகளில் நடைபெறும் பரிவர்த்தனைக்கு ஒரே கட்டணமாக 5 ரூபாயும், பங்குச்சந்தை வணிகத்துக்கான யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கு 0.02 சதவீதமும் கட்டணமாக வசூலிக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை யு.பி.ஐ., மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளும் இலவசமாக உள்ளன. இந்நிலையில், யு.பி.ஐ., மூலம் 2,000 ரூபாய்க்கு மேல் வர்த்தக நிறுவனங்கள் பெறும் பணத்திற்கு கட்டணம் வசூலிக்க அனுமதிக்கும் வகையில், பணப்பரிவர்த்தனை சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் செய்தது.
இதையடுத்து, வணிக நிறுவனங்கள் யு.பி.ஐ., மூலம் பெறும் பணத்திற்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும், அதில் வங்கிகள், பணப்பரிவர்த்தனை செயலிகள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு எவ்வளவு பங்கு வழங்குவது என்பது குறித்து என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
யு.பி.ஐ., அமைப்பை நிர்வகிக்கும் தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை, பரிவர்த்தனை தொகையில் 0.4 சதவீதம் கட்டணம் வசூலிக்க, யு.பி.ஐ., சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளன.
அதாவது, கடைகள், வணிக நிறுவனங்களிடம் எம்.டி.ஆர். எனப்படும், 'மெர்ச்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட்' என்ற கட்டணம் வசூலிக்கப்படும்.இதில், 2,000 ரூபாய்க்கு 8 ரூபாய் கட்டணம் என்றாலும், பரிவர்த்தனை தொகை 75 ஆயிரத்துக்கு மேல் இருந்தாலும் அதிகபட்சம் 300 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்.இந்த கட்டண முறை அக்டோபர் 15ல் நடைமுறைக்கு வர உள்ளது. வசூலிக்கப்படும் கட்டணத்தில் வங்கிகளுக்கு 40 சதவீதம், மீதமுள்ள தொகை, யு.பி.ஐ., சேவையை வழங்கும் செயலிகள் இடையே சமமாக பகிரப்பட உள்ளது.
இந்த கட்டணம் வணிக நிறுவனங்களுக்கு மட்டும் விதிக்கப்படும். வாடிக்கையாளரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. தனிநபர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும். கடந்த ஆகஸ்டில் இந்தியாவில் யு.பி.ஐ., மூலம் 31,100 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்துள்ளது.
இந்நிலையில், யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் புதிய நடைமுறையால், இந்த துறைக்கு ஆண்டுக்கு 5,000 கோடி முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை கிடைக்கலாம் என, 'ஜெப்ரிஸ்' பொருளாதார ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.'பேடிஎம், கூகுள் பே, போன் பே, கிரெட்' உள்ளிட்ட செயலிகளுக்கும் இதன் மூலம் வருவாய் உயரும் என கூறியுள்ளனர்.