Economy, business and finance
2 ஆயிரம் ரூபாய் வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கூடாது: மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: ஆன்லைனில் யுபிஐ வாயிலாக 2 ஆயிரம் வரையிலான பணப்பரிமாற்றத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: யுபிஐ அல்லது ரூபே டெபிட் கார்டுகளை பயன்படுத்தி 2 ஆயிரம் ரூபாய் வரையிலான பணப்பரிவர்த்தனைகளை மக்கள் மேற்கொள்ளும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்படுகிறது. 2 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக பணம் செலுத்தும் மக்களிடம் இருந்து எந்தவொரு வங்கி அல்லது நிதியமைப்புகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேலான பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு ஏதும் தெரிவிக்கவில்லை.
கடந்த மாதம் ஆகஸ்ட் 13ம் தேதியுடன் முடிவடைந்த பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, வரி விதிப்பு மற்றும் பிற சட்டங்கள்( திருத்த ) மசோதா 2026 ன் கீழ் 2007 ம் ஆண்டு சட்டத்தின் உட்பிரிவு 10 ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அரசு அளித்த விளக்கத்தில் தேசிய கட்டண கார்ப்பரேஷன் கழகம் தலைமையிலான யுபிஐ மற்றும் சேவைகள் வழிகாட்டுதல் குழு கட்டணங்கள் குறித்து முடிவெடுக்கும் என்று அரசு தெரிவித்து உள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பி ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:மோடி அரசு, யுபிஐ மீது கட்டணம் விதிப்பதற்கான வழியை அமைதியாக திறந்துவிட்டுள்ளது. இப்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம். இந்தப் பரிவர்த்தனைகள் மொத்தப் பரிவர்த்தனை அளவில் வெறும் 5 சதவீதம் ஆக இருந்தாலும் அவை யுபிஐயின் மொத்த பரிவர்த்தனை மதிப்பில் கிட்டத்தட்ட 65 சதவீதத்தை உருவாக்குகிறது.
வாடிக்கையாளர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று அரசு கூறுகிறது. ஆனால், கடைக்காரர்கள் மீது விதிக்கப்படும் இந்த கட்டணம் இறுதியில் எங்கிருந்து வரும். விலைகளுடன் சேர்க்கப்பட்டு, வாடிக்கையாளரின் பாக்கெட்டில் இருந்து தான் எடுக்கப்படும்.
அமெரிக்க பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் இந்தியாவின் பூஜ்ஜிய கட்டண கொள்கையை நீண்ட காலமாக எதுிர்த்து வந்தன. இப்போது மோடி அரசு அந்தக் கொள்கையை சரியாக அதே திசையில் மாற்றுவதற்கான வழியை திறந்துவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.