Economy, business and finance
யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் - மத்திய அரசு விளக்கம்!

யு.பி.ஐ. (U.P.I.) டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. அதாவது ரூ.2,000-க்கு மேலான அனைத்து யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் விதிக்கப்படுவதாகத் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், தனிநபர்களுக்கு இடையேயான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் ரூ.2,000-க்கு மேற்பட்ட வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல், ரயில்வே, தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 கட்டணம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே விதிக்கப்படும் என்றும், வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்தக் கட்டணம் அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும்போது மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்தக் கட்டணம் அமல்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் ரூ.75,000-க்கு மேற்பட்ட வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் ஊக்குவிக்கும் வகையில், குறிப்பிட்ட யூபிஐ வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கான புதிய திருத்தப்பட்ட மெர்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் கட்டணக் கட்டமைப்பு வரும் அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. நுகர்வோருக்கான யூபிஐ பரிவர்த்தனைகள் எப்போதும் போல முற்றிலும் இலவசமாகவே தொடரும்.
இந்த புதிய விதிமுறையின்படி, 95 சதவீதத்திற்கும் அதிகமான குறைந்த மதிப்புள்ள யூபிஐ பரிவர்த்தனைகள் (ரூ. 2,000-க்கு கீழ் உள்ளவை) மற்றும் சிறு வணிகர்களுக்கான பரிவர்த்தனைகள் தொடர்ந்து பூஜ்ஜிய எமடிஆர் வரம்பிற்குள் இருக்கும். குறிப்பாக, க்யூஆர் கோடு மூலம் மாதம் ரூ. 1 லட்சம் வரை தங்களது வங்கி கணக்குகளில் நேரடியாகப் பணம் பெறும் சிறு வணிகர்களுக்கு எந்தவொரு எமடிஆர் கட்டணமும் விதிக்கப்படாது. மேலும், சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற சந்தைகளில் டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பை மேம்படுத்த சிறு வணிகர்களுக்கான பிரத்யேக நிதி ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. ரயில்வே, தொலைத்தொடர்பு சேவைகள், காப்பீடு மற்றும் எரிபொருள் போன்ற குறிப்பிட்ட வணிகப் பிரிவுகளில் ரூ. 2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 5 என்ற நிலையான கட்டணமும், மற்ற பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத எமடிஆர் கட்டணமும் (அதிகபட்சமாக ரூ. 300 வரை) விதிக்கப்படும்.
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் டிஜிட்டல் வாலட்களுடன் ஒப்பிடுகையில் இந்த திருத்தப்பட்ட யூபிஐ கட்டணங்கள் மிகவும் குறைவானவை என்பதுடன், உயர் மதிப்புள்ள பரிவர்த்தனைகள் மூலம் கிடைக்கும் இந்த வருவாய் இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மற்றும் யூபிஐ கட்டமைப்பின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)