Arts, culture, entertainment and media
“இது போன்ற திரைப்படம் அரிதாகவே நிகழும்..” - ‘சிக்மா’ குறித்து நடிகர் சந்தீப் கிஷன் நெகிழ்ச்சி!

“இது போன்ற திரைப்படங்கள் அரிதாகவே நிகழும்” என ‘சிக்மா’ படம் குறித்து நடிகர் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நடிகர் சந்தீப் கிஷன் பேசுகையில், "இது போன்ற படம் மிக அரிதாகவே நடக்கும். இதற்கு முக்கிய காரணமாக இருந்த இயக்குநர் சஞ்சய்க்கு என் அன்பும் நன்றியும். அவருக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று கடுமையாக இந்த படத்தில் உழைத்திருக்கிறார்.
'சிக்மா' மிக ஜாலியான ஜென்ஸீ திரைப்படம். உங்கள் முதல் படத்தை நான் நல்லபடியாக செய்வேன் என்று நான் கூறிய வார்த்தையை நம்பி வாய்ப்பு கொடுத்த சஞ்சய்க்கு நன்றி. நாம் நேசிக்கும் ஒரு விஷயத்தை பயமில்லாமல் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அது போல தான் 'சிக்மா' படத்திற்கும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். இந்த வெற்றிக்கு முதல் காரணம் சஞ்சய், இரண்டாவது காரணம் லைகா புரொடக்ஷன்ஸ். படக்குழுவினர் அனைவரும் சின்சியராக உழைத்து உள்ளனர். நிச்சயம் உங்களுக்கும் இந்த படம் பிடிக்கும்".
