Arts, culture, entertainment and media
``எனக்கு ‘மாநகரம்’ வரிசையில இப்போ ‘சிக்மா’ சேரப்போகுது!’’ - சந்தீப் கிஷன்

பெரும்பாலும் தனது முதல் படத்தை எழுதும் ஒரு டைரக்டர், தன்னைத்தான் ஹீரோவாக வைத்து எழுதுவார். ஆனால், சஞ்சய் ‘சிக்மா’ படத்தில் அந்த முடிவை எடுக்கவில்லை.
சந்தீப் கிஷன், தெலுங்கில் வெற்றிக்கொடி பறக்க வலம்வருபவர். ‘மாநகரம்’ தந்த வெற்றியாளர். தற்போது, தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் டைரக்ட் செய்திருக்கும் ‘சிக்மா’ படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் சஞ்சய்யின் திறமையை வெளிப்படுத்தப்போகும் படமாக அதிக கவனம் பெற்றிருக்கிறது ‘சிக்மா’. சென்னையில் இருந்த நாயகன் சந்தீப்போடு இந்த உரையாடலை ஆரம்பித்தோம்.
‘‘நீங்கள் ‘சிக்மா’ படத்துக்குள் வந்தது எப்படி?’’
``சஞ்சய், படம் டைரக்ட் செய்யப்போகிறார் என்ற செய்தி எங்கே திரும்பினாலும் கேட்டுக்கொண்டேயிருந்தது. `சஞ்சய் உங்களைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்’ என்று கடைசியில் எனக்கே செய்தி வந்தது. சஞ்சய் சொன்ன கதை, எனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது. சஞ்சய் ஹைதராபாத்துக்கு வந்து மூன்றரை மணி நேரம் கதை சொன்னார். அவர் கதை சொன்னவிதமும், அதிலிருந்த தெளிவும் சூப்பர். இது, ‘ராயன்’ ரிலீஸுக்கு முன்னரே நடந்தது.
சஞ்சய் இவ்வளவு நேசத்தோடு எழுதின படத்தை என்னிடம் கொண்டுவந்ததற்கான காரணத்தைக் கேட்டேன். அவர், என்னுடைய முந்தைய படங்கள் ஒவ்வொன்றையும் பார்த்திருந்தார். எந்தெந்தப் படம் பிடிக்கும், ஏன் பிடிக்கும் என்றெல்லாம் அவர் காரணங்களை அடுக்கினார். அப்போதே எங்களுக்குள் நல்ல புரிதல் வந்துவிட்டது. `இதைத்தான் நாம் கொடுக்க வேண்டும்’ என்பதில் அவருக்கு எந்தக் குழப்பமும் இல்லை. தான் கற்பனை பண்ணி வைத்திருந்ததை நன்றாகக் கொண்டுவர வேண்டும் என்று அவர் ரொம்பக் கூர்மையாக வேலை செய்தார்.’’
``உங்களது பாத்திரப் படைப்பு ‘சிக்மா’வில் எப்படி இருக்கும்?’’
``படத்தில் என் பெயர் குரு. சஞ்சய் சொல்லிக் காண்பித்த பல விஷயங்களை நான் இமிட்டேட் செய்திருக்கிறேன். படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. நான் புதுமுக இயக்குநர்களிடம்தான் அதிகம் நடித்திருக்கிறேன். நான், அவர்கள் சினிமாவுக்குப் புதியவர்கள் என்று யோசிப்பதே இல்லை. இந்தப் படத்தை அவர்கள் ஏன் செய்ய நினைக்கிறார்கள், அவர்கள் கதை சொல்லும்போது நமக்கு ஒரு சினிமா கண்ணுக்கு முன் தெரிகிறதா என்பதைத்தான் பார்ப்பேன். எனக்கும் அவர்களுக்கும் நன்றாக வொர்க்அவுட் ஆகும். லோகேஷ் கனகராஜுடன் நான் செய்த ‘மாநகரம்’ அதற்கு நல்ல உதாரணம். இப்போது ‘சிக்மா’வும் அந்த வரிசையில் சேரப்போகிறது.’’
`` ‘சிக்மா’வில் நடித்த பிறகு இப்போது என்ன தோன்றுகிறது?’’
``எனக்குக் கதைதான் முக்கியம். எங்கே நல்லது இருந்தாலும் தேடித் தேடி பார்ப்பதுதான் நல்ல சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் ரசனையைத் தருகிறது. சில படங்கள் நம்மை இன்ஸ்பயர் பண்ணும். சில படங்கள் சந்தோஷப்படுத்தும். எனக்கு ‘சிக்மா’ டைட்டிலைச் சொன்னதும் பிடித்தது. கதை சொல்லிக் கேட்டதும் இன்னமும் பிடித்தது. சஞ்சய் இயக்கத்தில் நடித்தபோது பிரஷரை ஃபீல் பண்ணவே இல்லை. சஞ்சய்க்கு வேண்டிய நல்ல சப்போர்ட் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அப்படியே செய்திருக்கிறேன்.
பெரும்பாலும் தனது முதல் படத்தை எழுதும் ஒரு டைரக்டர், தன்னைத்தான் ஹீரோவாக வைத்து எழுதுவார். ஆனால், சஞ்சய் ‘சிக்மா’ படத்தில் அந்த முடிவை எடுக்கவில்லை. அவர் நடிக்கக் களம் இறங்கினால், அவரை பிரமாண்டமாக கொண்டுபோய் நிறுத்த இங்கே ஸ்பேஸ் இருக்கிறது. ஆனால், அவர் மிகவும் எளிமையானவர். `இது எனக்குத் தெரியும்’ என்பதில் எந்தப் பெருமிதமும் கொள்ளாத அருமையான மனிதர். `சிக்மா’ மாதிரி படங்கள் ஜெயிக்கும்போது ஒரு புது ஜெனரேஷன் வெற்றிபெறுகிற நல்ல விஷயமும் நடக்கும். நான் அதை விரும்புகிறேன்.’’
``திரையுலகத்தினர் உங்களிடம் சஞ்சய் டைரக்ஷன் பற்றிக் கேட்டார்களா?’’
``தினமும் யாராவது ஒருத்தர் அவரைப் பற்றி கேட்டுக்கொண்டேயிருப்பார்கள். 24 வயதில் அவருக்கு இருக்கிற மிகச் சுலபமான வாய்ப்புகளை விட்டுட்டு, ஒரு படத்தை டைரக்ட் செய்வது எனக்கே சர்ப்ரைஸ். மற்றவர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும். அதேசமயம், அவர்மேல் அவ்வளவு அன்பாய் இருப்பார்கள். சஞ்சய்யும், எல்லோரிடமும் மிக இயல்பாகப் பழகுவார். `சிக்மா’ கதை எல்லோருக்கும் போய்ச் சேரும் என்று நம்புகிறேன்.’’
