Crime, law and justice
பொது சிவில் சட்ட விவகாரத்தில் தே.ஜ., கூட்டணியில் முரண்பாடு
பாட்னா: ‘அடுத்த லோக்சபா தேர்தலுக்குள், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்த நிலையில், பா.ஜ., கூட்டணி கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன.
மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாடு முழுதும், யு.சி.சி., எனப்படும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்ட நடைமுறைகள் வழங்குவதே இதன் நோக்கம்.
இதற்கு முன்னோட்டமாக, பா.ஜ., ஆளும் மாநிலங்களின் சட்டசபைகளில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக, 2025ல், பா.ஜ., ஆளும் உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, அக்கட்சி ஆட்சி செய்யும் கோவா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பொது சிவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது; அமலுக்கு வரவில்லை.
மஹாராஷ்டிராவின் மும்பையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘2029 லோக்சபா தேர்தலுக்குள், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும், 21 மாநிலங்களில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என்றார்.
இந்த கருத்துக்கு, தே.ஜ., கூட்டணியில் உள்ள மஹாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
எனினும், மத்தியிலும், பீஹாரிலும் தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதல்வரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகியவை மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன.
இது குறித்து, பீஹார் தலைநகர் பாட்னாவில், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த அம்மாநில துணை முதல்வர் விஜய் குமார் சவுத்ரி நேற்று கூறியதாவது:
பார்லி.,யில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போதே, அதை ஆதரிப்பதாகவும், ஆனால், பீஹாரில் அனுமதிக்க மாட்டோம் என்றும் எங்கள் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் தெளிவாக கூறி விட்டார். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
இது தொடர்பாக, கட்சியின் செயல் தலைவர் சஞ்சய் குமார் ஜா விரைவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசுவார். தற்போதைய நிலவரப்படி, பொது சிவில் சட்டத்தில் உள்ள விபரங்கள் எங்களுக்கு தெரியாது. அது குறித்து ஆலோசிக்கப்படும் போது, அதில் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய அம்சமும் இல்லை என்பது தெரிய வந்தால், நாங்கள் ஏன் அதை எதிர்க்கப் போகிறோம்?
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் கூறுகையில், ‘‘முதலில், பொது சிவில் சட்ட மசோதாவின் வரைவு வெளியாகட்டும். அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கட்டாயம் கேட்டறிய வேண்டும். அதன்பின், எங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கிறோம்,’’ என்றார்.
தெலுங்கு தேசம் கட்சியும், ‘அனைத்து தரப்பினரை கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து எட்டப்பட பின்னரே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்’ என, திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கூட்டணிக்குள்ளே முரண்பாடுகள் நீடிப்பதால், இந்த விவகாரத்தில் பா.ஜ., மேலிடம் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.