Crime, law and justice
”முடியவே... முடியாது...”; பாஜகவிற்கு எதிராக கூட்டணிக்கட்சிகள் போர்க்கொடி

மராட்டிய மாநிலம், மும்பையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொதுசிவில் சட்டம் குறித்துப் பேசியிருந்தார். அதில், “2029ம் ஆண்டுக்குள் பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது எக்ஸ் பதிவில், ”2029 க்குள் பொதுசிவில் சட்டம் திணிக்கப்படும் என்ற ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பு, அக்கட்சியின் அரசியல் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. அடுத்த மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தனது இந்துத்துவா வாக்கு வங்கியை வலுப்படுத்த பொது சிவில் சட்டத்தை பாஜக ஆயுதமாகப் பயன்படுத்தி, மதம் மற்றும் பெரும்பான்மைவாத அரசியலுக்கான கருவியாக மாற்றுகிறது.
ஒரே மாதிரியான தன்மை என்பது சமத்துவத்திற்குச் சமமானதல்ல. வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயத்துறை நெருக்கடி, மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த நெருக்கடிகள் போன்ற பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தைத் திசை திருப்ப பாஜக முயல்கிறது” என்று தெரிவித்துள்ளது.
அமித்ஷாவின் அறிவிப்புக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஐக்கிய ஜனதா தளமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, அக்கட்சியின் மூத்த தலைவர் ஷியாம் ரஜக், “பீகாரில் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம். இது குறித்து அமைச்சர் அமித்ஷாவிடம் பேசுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல, மற்றொரு கூட்டணிக் கட்சியான ‘லோக் ஜனசக்தி கட்சி’யின் (ராம் விலாஸ்) தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சிராக் பஸ்வான், “நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை இவை இரண்டும் மிக முக்கியம். அரசியலமைப்பு பிரிவே பழங்குடியின மக்களுக்குச் சிறப்பு விலக்குகளை வழங்கியுள்ளது” என்று பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பீகாரில் கூட்டணிக் கட்சிகளே தங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளது, பாஜகவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)