Crime, law and justice
பாஜக கூட்டணி ஆளும் 21 மாநிலங்களில் 2029-க்குள் பொது சிவில் சட்டம்: அமித் ஷா தகவல்!
நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படுவது குறித்து...
பொது சிவில் சட்டத்தை 21 மாநிலங்களில் ஆட்சிபுரியும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் வரும் 2029-ஆம் ஆண்டுக்கு முன்பு அறிமுகப்படுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மும்பையில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்தார். அப்போது பாஜக தலைமையிலான மத்திய அரசின் 12 ஆண்டு சாதனைகளையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் 25 ஆண்டுகால பயணம் குறித்தும் விளக்கி அமித் ஷா கூறியதாவது:
முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமைகள் வழங்கும் நோக்கில் முத்தலாக் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது. நாங்கள் (பாஜக) சில மாநிலங்களில் பொது சிவில் சட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். இச்சட்டத்தை 21 மாநிலங்களில் ஆட்சி புரியும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகள் வரும் 2029-ஆம் ஆண்டுக்கு முன்பு அறிமுகப்படுத்தும் என்று நம்புகிறேன்.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் நாட்டின் குற்றவியல் நீதி பரிபாலன முறையை மத்திய அரசு வலுப்படுத்தியுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வந்த ஓராண்டுக்குள் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதத்தில் 30 சதவீத உயர்வை சில மாநிலங்கள் சாதித்துள்ளன. மூன்று ஆண்டுகளுக்குள் நீதி கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியல்சாசனத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகள் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தப்படாமலும், ஒரு தோட்டா கூட சுடப்படாமலும் நீக்கப்பட்டுள்ளன. தற்போது காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 50 ஆண்டுகளாக இருந்து வந்த நக்ஸல் தீவிரவாதத்துக்கு மத்திய அரசு முடிவுகட்டியுள்ளது. நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் 14-க்கும் மேற்பட்ட அமைதி ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளது. வன்முறைப் பாதையில் இருந்த 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சரணடைந்துள்ளனர். வடகிழக்கு பிராந்தியத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசென்றுள்ளோம்.
துல்லியத் தாக்குதல்கள், வான்வழித் தாக்குதல்கள், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஆகியவை பயங்கரவாதத்தை துளியும் சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை நிறுவியுள்ளன.
மணிப்பூரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த 1951-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பயன்படுத்தப்படுமா என்று கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தில் தனது கூட்டணிக் கட்சிகளுடனும் மணிப்பூரைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுடனும் பாஜக விவாதித்து வருகிறது. இதில் என்ன முடிவெடுத்தாலும் அதை உங்களுக்குத் தெரிவிப்போம்.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவி வந்தவர்கள் மும்பை உள்ளிட்ட நகரங்களில் கண்டறியப்பட்டுள்ளனர். எனினும் அவர்களை அடையாளம் காண்பதற்குப் பயன்படும் வழிமுறைகளை அரசு வெளிப்படுத்தாது. அதை வெளிப்படையாக அறிவித்தால் அவர்களை எவ்வாறு பிடிக்க முடியும்?
சட்டவிரோதமாக ஊடுருவி வந்தவர்களை அடையாளம் காணவும் அவர்களைத் திருப்பி அனுப்பவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் அடையாளம் கண்டு வெளியேற்றுவோம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவிக்கிறேன்.
போதைப் பொருள் இல்லாத இந்தியா என்ற திட்டத்தை நாங்கள் அண்மையில் தொடங்கியுள்ளோம். இதன் ஒரு பகுதியாக நான் ஒவ்வொரு மாநிலத்திலும் பயணம் மேற்கொள்வேன்.
இத்திட்டம் அடிமட்டம் வரை அமல்படுத்தப்பட்டு, போதைப் பொருள்களுக்கு எதிராக இந்தியா வெற்றி பெறுவதை உறுதிப்படுத்துவோம் என்றார் அவர்.
ஆய்வக வைரம்...: மும்பையில் 52-ஆவது இந்திய வைரக்கல் மற்றும் ஆபரண விருதுகளை வழங்கி அமித் ஷா பேசுகையில், "ஆய்வகத்தில் வைரக்கற்களை தயாரிப்பதற்கான கட்டமைப்பை இந்தியர்கள் நிர்வகிக்க வேண்டும். ஆய்வகத்தில் வைரக்கற்களை தயாரிப்பதற்கான வாய்ப்பை
முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு இந்தியாவிடம் உள்கட்டமைப்பு வசதிகள், திறன்கள், மூலதனம் மற்றும் வர்த்தகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது' என்று தெரிவித்தார்.
மும்பையில் மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய அவர் "காலனிமயமாக்கலில் இருந்து வரலாற்றை மாற்றி எழுதுவது என்பது கடந்தகால உண்மைகளை அழிப்பது ஆகாது. மாறாக இந்தியக் கண்ணோட்டத்தில் உண்மைகளை வெளிப்படுத்துவதே அதன் நோக்கம்' என்றார்.
By 2029, 21 NDA-ruled states will have Uniform Civil Code, says Home Minister Amit Shah
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.