Politics
டாக்டர்கள் அறிவுரைப்படி இன்னும் 3 நாட்கள் ஓய்வு: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 'டாக்டர்களின் அறிவுரைப்படி, இன்னும் மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: என் உடல் நலம் குறித்து, அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி. வைரஸ் தொற்றால் ஏற்பட்ட காய்ச்சலை தொடர்ந்து, டாக்டர்களின் அறிவுரைப்படி, வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இன்னும் மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.
இதன் காரணமாக, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பொதுச்செயலர் துரைமுருகனின் அறிவுறுத்தல்படி, தள்ளிவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி, பின்னர் அறிவிக்கப்படும்.
அண்ணாதுரை பிறந்த நாளில், தொண்டர்கள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தேன். தி.மு.க.,வின் 78ம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, கட்சி கொடிகளை புதுப்பித்து ஏற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.