Politics
ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: தி.மு.க., முப்பெரும் விழா ஒத்திவைப்பு

சென்னை: 'தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், நேற்று நடக்க இருந்த, முப்பெரும் விழா ஒத்தி வைக்கப்பட்டது' என, அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுதும், நேற்று அவரது சிலைக்கு தி.மு.க., வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அண்ணாதுரை சிலைக்கு, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று ஸ்டாலின், வைரஸ் காய்ச்சல் காரணமாக, எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல், வீட்டில் ஓய்வு எடுத்தார்.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அறிவாலயத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, துரைமுருகன் மரியாதை செலுத்தினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அவரால் அண்ணாதுரை சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை.
''மேலும், அறிவாலயத்தில் நடக்க இருந்த, தி.மு.க., முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என்றார்.