Politics
இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?; அன்புமணி பரபரப்பு பதில்!

வரும் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ம.க போட்டியிடாத சூழலில், யாருக்கு ஆதரவு என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை. சமீபத்தில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் 2 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. இருப்பினும் அந்த தொகுதிகளின் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததால், இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் தோழமை மற்றும் கூட்டணி கட்சிகளிடம் அதிமுக ஆதரவு திரட்டி வருகிறது.
அதன்படி, பா.ஜ.க, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய தமிழகம், அமமுக ஆகிய தலைவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து ஆதரவு கோரி வந்தனர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸை தற்போது வரை அதிமுக தலைவர்கள் சந்தித்து ஆதரவு கேட்காமல் உள்ளனர். சில தினங்களுக்கு அன்புமணியிடம் எடப்பாடி பழனிசாமி ஃபோனில் பேசி ஆதரவு கேட்டதாகவும், அன்புமணியை விரைவில் அதிமுக தலைவர்கள் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தற்போது வரை அன்புமணியை அதிமுக தலைவர்கள் சந்திக்கவே இல்லை.
இந்த சூழலில், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று (16-09-26) மதுராந்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அந்த நிகழ்வின் போது அதிமுக, அமமுக, இந்திய ஜனநாயகக் கட்சி, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். ஆனால், பா.ம.க நிர்வாகிகளோ அல்லது தொண்டர்களோ அந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. மதுராந்தகம் தொகுதியில் அதிகளவில் வாக்கு சதவீதத்தை வைத்திருக்கும் பா.ம.க இந்த நிகழ்வில் பங்கேற்காதது பேசுபொருளாக மாறியது. குறிப்பாக பாம.க ஆதரவு இல்லாமல் அதிமுக இடைத்தேர்தலை சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து அன்புமணி நேற்று தெரிவித்தார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அன்புமணி, “இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என விரைவில் அறிவிப்போம். எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தப் பிறகு உங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)