Politics
தாராபுரம் இடைத்தேர்தல்: ‘பெண்கள் படை’ களத்தில்... வெல்லப்போவது யார்?
விவசாயம், கால்நடை வளர்ப்பு, ஜவுளி, செங்கல்சூளை ஆகியவை இந்தப் பகுதியின் முக்கியத் தொழில்கள்.

ஆளுங்கட்சிக்கு அக்னிப் பரீட்சை!
தாராபுரம் தொகுதியில் தேர்தல் கணக்குகள் வித்தியாசமாக இருக்கின்றன. த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்ட்டுகள் என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது. இதில் த.வெ.க சார்பில் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்தியபாமா, தி.மு.க சார்பில் வழக்கறிஞர் சுகன்யா, அ.தி.மு.க சார்பில் பானுமதி, நாம் தமிழர் சார்பில் கார்த்திகா என முக்கியக் கட்சிகள் அனைத்திலும் பெண்களே வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கின்றனர்.
தேர்தல் பணிகளிலும் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. த.வெ.க சார்பில் அமைச்சர் அருண் ராஜ் தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மாவட்டச் செயலாளர் பத்மநாபன் ஆகியோரும், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையிலும் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2.22 லட்சம் வாக்காளர்கள்... தீர்ப்பை எழுதப்போவது யார்?
தாராபுரம் தொகுதியில் 1,06,875 ஆண் வாக்காளர்கள், 1,15,523 பெண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,22,406 பேர் உள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்களே அதிகம் என்பதால், பெண் வேட்பாளர்கள் அதிக அளவில் களமிறங்கியிருப் பதும் தேர்தல் கணக்கில் முக்கியத்துவம் பெறுகிறது.
விவசாயம், கால்நடை வளர்ப்பு, ஜவுளி, செங்கல்சூளை ஆகியவை இந்தப் பகுதியின் முக்கியத் தொழில்கள். அதேவேளையில், அமராவதி ஆறு மாசுபடுவது, குடிநீர்த் தட்டுப்பாடு, நிலத்தடி நீர்மட்டம் சரிவு, கல்குவாரி பாதிப்பு, கிடப்பிலுள்ள உப்பேரி பாசனத் திட்டம், தரம் உயர்த்தப்படாத அரசு மருத்துவமனை, சாலை - மழைநீர் வடிகால் வசதியின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. தக்காளி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகளைச் சேமிக்க குளிர்பதனக் கிடங்கு இல்லாததும் விவசாயிகளுக்குச் சிக்கலாக இருக்கிறது.
சத்தியபாமா - செல்வாக்கா... அதிருப்தியா?
தாராபுரம் தொகுதியில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மாறி மாறி வெற்றிபெற்று வருகின்றன. 2021-ல் தி.மு.க-வின் கயல்விழி செல்வராஜ் வென்று அமைச்சரான நிலையில், 2026-ல் அ.தி.மு.க-வின் சத்தியபாமா, தி.மு.க வேட்பாளர் இந்திராணியை 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். த.வெ.க வேட்பாளர் கவுரி சித்ரா 46,438 வாக்குகளுடன் மூன்றாவது இடம் பிடித்தார்.
இந்த நிலையில், வெற்றிபெற்ற அதே சத்தியபாமா, தற்போது த.வெ.க வேட்பாளராகக் களமிறங்கியிருப்பது இடைத்தேர்தலின் முக்கிய அரசியல் திருப்பமாகியிருக்கிறது. அவர்மீதான அதிருப்தியா, விஜய்க்கான ஆதரவா என்பதே தாராபுரத்தின் பிரதான விவாதமாக இருக்கிறது.
தாராபுரத்தில் 36 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டிவரும் காளிமுத்துவிடம் பேசியபோது, “போன முறை
அ.தி.மு.க-வுக்குத்தான் ஓட்டுப் போட்டேன். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றிபெறுவது எழுதப் படாத விதி. சத்தியபாமா மீது அதிருப்தி இருப்பது உண்மைதான். ஆனால், முதல்வர் விஜய் முன்பாக அது எடுபடுமா எனத் தெரியவில்லை. யார் வெற்றி பெற்றாலும், தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும்” என்றார்.
‘சத்தியபாமாவுக்கு எதிர்ப்பு’... கிராமங்களில் பேனர்கள்!
``ஆனால், களம் அப்படியொன்றும் த.வெ.க-வுக்குச் சாதகமாக இல்லை’’ என்கிறார் இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சி.ஈஸ்வரன். அவர் கூறுகையில், “தாராபுரம் நகரத்தைவிட கிராமப்புறங்களில் சத்தியபாமாவுக்கு எதிரான அதிருப்தி அதிகமாக உள்ளது. குடிநீர், விவசாயக் கடன் உள்ளிட்ட பிரச்னைகள் முக்கியமாக இருக்கின்றன. இதனால் சில கிராமங்களில் சத்தியபாமா உள்ளிட்ட யாரும் ஓட்டுக் கேட்டு வரக் கூடாது என பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் இரட்டை இலைக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது” என்றார்.
பெயர் குறிப்பிட விரும்பாத தள்ளுவண்டிப் பழ வியாபாரி ஒருவர், “இப்போதுதான் தேர்தல் பணிமனைகள் அமைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் ஒரு வாரம் போகட்டும். முக்கியக் கட்சி நிர்வாகிகள் இங்கேயே முகாமிடுவார்கள். பணம், பரிசுப்பொருள்கள் என ஆறாக ஓடும். வாக்காளர்கள் காட்டில் மழைதான். இது சாதாரண இடைத்தேர்தல் இல்லை. ஆளுங்கட்சியான த.வெ.க-வால் கொண்டுவரப்பட்ட தேர்தல் என்பதால் வெற்றிபெற எல்லா வழிகளையும் கையாள்வார்கள். தி.மு.க-வும் லேசில் விடாது” என்றார்.
சாதிக் கணக்கு... யாருக்குச் சாதகம்?
தாராபுரம் தேர்தலில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள், அருந்ததியர்கள் ஆகிய சமூகங்கள் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பவர்களாகப் பார்க்கப்படுகின்றனர். ஆனால், பிரதான கட்சிகள் பள்ளர் சமூகத்தினருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கிய நிலையில், அருந்ததியர்களுக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற அதிருப்தி பட்டியல் சமூகத்தினரிடையே இருப்பதாகக் களத்தில் பேசப்படுகிறது.
த.வெ.க-வுக்கு இது முதல் தேர்தல் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டிய முக்கியக் களம். முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்தியபாமா வேட்பாளராக இருப்பதால், ‘குதிரைப் பேரம்’ குற்றச்சாட்டையும் முறியடித்து, மக்கள் தீர்ப்பால் வென்றதாக நிரூபிக்கவேண்டிய கட்டாயம் அந்தக் கட்சிக்கு உள்ளது. தி.மு.க-வுக்கு இழந்த தொகுதியை மீட்கவும், அ.தி.மு.க-வுக்கு முன்னாள் எம்.எல்.ஏ-வை எதிர்த்து ‘இரட்டை இலை’ பலத்தை நிரூபிக்கவும் சவால். நாம் தமிழர், கம்யூனிஸ்ட்டுகளும் களத்தில் இருந்தாலும், வெற்றி, தோல்வியில் அவர்களுக்கு எவ்விதப் பங்கும் இருக்கப்போவதில்லை.
‘வலுக்கட்டாயமாகத் தேர்தலை திணித்துள்ளனர்’ என அரசியல்ரீதியில் விமர்சனங்கள் இருந்தாலும், அது குறித்துத் தொகுதிக்குள் எவ்விதச் சலசலப்பும் இல்லை!
