Lifestyle and human interest
டெங்கு சிகிச்சைக்கு கூடுதல் கட்டணமா? '104'ல் புகார் செய்யலாம்!

சென்னை: 'டெங்கு காய்ச்சலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது, '104' என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்' என, மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துஉள்ளது.
தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், சாதாரண வார்டில் சிகிச்சை பெற, தினமும் 22,000 முதல் 75,000 ரூபாய் வரையிலும், தீவிர சிகிச்சைக்கு, 2 லட்சம் ரூபாய் வரையிலும் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளில், காய்ச்சல் பாதிப்புகளை கண்காணித்து, தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில், பிரத்யேக வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சலுடன் வரும் நோயாளிகளின் உடல்நிலையை மதிப்பீடு செய்து, நோயின் தீவிர தன்மைக்கு ஏற்ப, முன்னுரிமையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழலில், அரசு மருத்துவமனைகளிலேயே போதிய அளவு படுக்கை வசதிகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் சூழலை பயன்படுத்தி, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்.
வழக்கமாக வசூலிக்கப்படும் தொகையில் இருந்து கட்டணம் மாறுபட்டிருந்தால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு தடை விதிக்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிந்தால், '104' என்ற எண்ணில் பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.