Lifestyle and human interest
டெங்கு காய்ச்சல் : தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்!

டெங்கு பரவல் தொடர்பாக முக்கியமான உத்தரவு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி டெங்கு பரவலைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையான அளவு மருந்துகள் மற்றும் இரத்தத் தட்டணுக்கள் 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, திருவள்ளூர், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் தொகை அதிகம் உள்ள சென்னை, கோவை, திருவள்ளூர், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பரவலாக அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் சுமார் 2,600 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3,476 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் இதுவரை சுமார் 2,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில், இந்த மாதத்தில் 726 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூரில் 200 பேரும், திருவள்ளூரில் 700 பேரும், கடலூரில் 700 பேரும், செங்கல்பட்டில் 500 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருந்தகத்தில் மாத்திரைகளை வாங்கி, சாதாரண காய்ச்சல் என அலட்சியமாக இருக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், டெங்குவைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக பொது சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாக, கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்குவின் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், தற்போது அதன் பரவல் போக்கு சற்று அதிகரித்து வருவதால், பொதுமக்களும் டெங்குவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)