Lifestyle and human interest
“காய்ச்சல் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்” - அமைச்சர் அருண்ராஜ்!

“பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் முகக்கவசம் அணிவது நல்லது” - அமைச்சர் அருண்ராஜ்
காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை, சிவகங்கை, திருவள்ளூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருப்பதை காணமுடிகிறது. ஏடிஸ் எஜிப்டி (Aedes aegypti), ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) எனப்படும் இரு வகை கொசுக்கள் மனிதர்களை கடிப்பதன் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது.
இந்த கொசுக்கள் பொதுவாக பகலிலும், மாலை பொழுதுகளிலும் மட்டுமே மனிதர்களைக் கடிக்கும் தன்மை கொண்டவை. தமிழ்நாட்டில் சுமார் 16 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அதிவேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்... அறிகுறிகள் என்னென்ன? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
இந்த வைரஸ் பரவல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது, சுவாசத்தொற்று பரவல் அதிகமாக உள்ளது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவலும் உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். பரவலை தடுக்க, அரசு தீவிரமாக தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரம், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள், பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு முறையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே பதற்றம் வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.
