Lifestyle and human interest
வேகமாக பரவுகிறது டெங்கு காய்ச்சல்: 9 பேர் பலி; 15,933 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை, 15,933 பேர் பாதிக்கப்பட்டு, ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில், சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது.
வெயில், மழை என, காலநிலை மாற்றத்தால், டெங்குவை பரப்பும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மாநிலம் முழுதும் பரவலாக, டெங்கு பாதிப்பு உள்ளது.
தினசரி, 70 முதல் 100 பேர் வரை, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும், 79 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளில், சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது: தற்போது, சுவாச தொற்று பரவல் அதிகமாக உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை, அரசு எடுத்து வருகிறது.
பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர். பொது இடங்களுக்கு செல்லும்போது, முகக்கவசம் அணிய வேண்டும்.
டெங்கு காய்ச்சல் பரவலும் உள்ளது. இந்த ஆண்டில், இதுவரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், 15,933 பேர் பாதிக்கப்பட்டு, ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
டெங்கு தடுப்பு பணிகளில், 25,645 கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், டெங்குவுக்கு முறையான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவ கல்லுாரிகள், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு வாங்கிய தனியார் கல்லுாரிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.