Politics
“நான் ஒருத்தன் மட்டும் பேரவைக்குள் போயிருந்தால்...” - அதிரடியாக பேசும் ராணிப்பேட்டை காந்தி

ஓரளவுக்கு நன்றாகச் செய்கிறார். பொறுமையாக பதில் சொல்வதைப் பார்க்கும் போது அவரைப் பாராட்டியாக வேண்டும்.
2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் த.வெ.க அரசு கொள்கையளவிலான சில மாற்றங்களைச் செய்ய முடிவெடுத்திருக்கிறது. இது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானம் காரசாரமான விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கடந்த தி.மு.க அரசில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சராக இருந்த ராணிப்பேட்டை ஆர்.காந்தியிடம் சில கேள்விகளை முன்வைத்துப் பேசினோம்.
“கடந்த ஆட்சிக்காலங்களில் வழங்கப்பட்டுவந்த எட்டு முழ வேட்டிக்கு பதிலாக, நான்கு முழ வேட்டியை வழங்க இப்போதைய அரசு முடிவெடுத்திருக்கிறது. அப்படியெனில், உங்கள் ஆட்சியில் கொடுக்கப்பட்ட வேட்டியில் தரமில்லையா?”
“கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்குத் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காகத்தான் அந்தக்காலத்திலிருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2021-க்கு முன்பு வரை கொடுக்கப்பட்ட வேட்டி, சேலைகள் தரமாக இருக்காது. ஏழை, எளிய மக்கள் யாரும் பயன்படுத்த மாட்டார்கள். நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான் எல்லாவற்றையும் சரி செய்தோம். ஐந்து புதிய பார்டர் ரகங்களில் வேட்டியும், பதினைந்து ரகங்களில் சேலையும் வழங்கினோம். பருத்தி நூலின் விலை அதிகம். பாலியஸ்டர் நூலின் விலை குறைவு. ஒரு சில கூட்டுறவு சங்கங்களில் பருத்திக்கு பதிலாக பாலியஸ்டரை அதிகமாகக் கலந்து நெய்துவிடுகிறார்கள். இது போன்ற தவறுகளையும் தரக்கட்டுப்பாட்டு சோதனையில் கண்டுபிடித்து, தரமான வேட்டி, சேலைகளை மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்த்தோம். இவர்கள் கொடுப்பதாகச் சொல்லியிருக்கும் நான்கு முழ வேட்டி எப்படியிருக்கப்போகிறது என்று தெரியவில்லை.”
“உங்கள் ஆட்சியில்தான் கைத்தறித்துறை சிறப்பாக மாறியது என்றால், டெண்டர் நடைமுறையில் குழப்பம், தனியார் நிறுவனங்களின் தலையீடு, கமிஷன் புகார்களால் உங்கள் மீதும் தொடர் சர்ச்சை இருந்தது ஏன்?”
“நான் எவ்விதமான சமரசமும் செய்து கொண்டது கிடையாது. நிஜமாகவே எனக்கு கைத்தறித்துறை பற்றி எதுவும் தெரியாது. நான் பொறுப்பேற்ற பிறகு, சிறப்பு ஆலோசகரை உடன் வைத்துக்கொண்டு பிரச்னைகளைக் களைந்தேன். எங்களுக்கு முந்தைய 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.9 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. ஓராண்டிலேயே கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை லாபகரமாக மாற்றினேன். போலி பில்களைக் கொடுத்து ஏமாற்றிவந்த ஐம்பது லெட்டர் பேடு கூட்டுறவு சங்கங்களின் உரிமத்தையும் ரத்துசெய்தேன். கூட்டுறவு நூற்பாலைகளிலிருந்துதான் நூல் கொள்முதல் செய்யப்படுகிறது. முன்பெல்லாம், டையிங் (சாயமிடுதல்) மெஷின் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள்தான் டெண்டரைத் தீர்மானிக்க முடிந்தது. அந்த நிலைக்கும் முற்றுப்புள்ளி வைத்தேன். நான் ரூ.10 கோடி கமிஷன் வாங்கிவிட்டேன். ரூ.200 கோடி கமிஷன் வாங்கிவிட்டேன் என்று எனக்கெதிராக தவறான தகவல்களைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். அவை அனைத்தும் பொய்க் குற்றச்சாட்டுகள்.”
“நீங்கள் இருந்த இடத்துக்குப் புதிதாக விஜய் பாலாஜி என்ற அமைச்சர் வந்திருக்கிறார். கைத்தறித்துறையை அவர் எப்படிக் கையாள்கிறார்?”
“12 ஆண்டுகளுக்குப் பிறகு வேட்டி, சேலை திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்திருப்பதாக, துறை அமைச்சர் பொய் சொல்கிறார். கடந்த ஆட்சியில், தரத்திலும் வடிவமைப்பிலும் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்துவிட்டோம். அவர்கள் உண்மையாக ஏதாவது பேசுகிறார்களா... ஒன்றையாவது சொல்ல முடியுமா... நான் ஒருத்தன் மட்டும் பேரவைக்குள் போயிருந்தால் தெரிந்திருக்கும். பின்னிடுவேன். யாரிடமும் போய் காக்கா பிடிக்க மாட்டேன். எங்கள் ஆட்களெல்லாம் மூடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பேசத் தெரியவில்லை. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். என் கட்சியிலும் சரி... யாராக இருந்தாலும் நேருக்கு நேர் பேசிவிடுவேன்.”
“முதல்வர் விஜய்யை இன்னொரு எம்.ஜி.ஆராக பிம்பப்படுத்துவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“எம்.ஜி.ஆர் இறந்த பிறகும் அவர் உயிரோடு இருப்பதாக நினைத்தே பலரும் இரட்டை இலைக்கு வாக்களித்துக்கொண்டிருந்தார்கள். அவரோடு இவரை ஒப்பிடக் கூடாது. இங்கேயே இப்படியிருக்கிறது. இதில், ‘விஜய் அடுத்த பிரதமர்’ என்று வடஇந்தியாவில் இன்ஸ்டாகிராமில் வீடியோ போடுவதற்காக ரூ.5 கோடி செலவு செய்கிறார்களாம். வெறும் ரீல்ஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றமா அது, அசிங்கமாக இருக்கிறது. ஒருவருக்கும் சப்ஜெக்ட் தெரியவில்லை. ஆதவ் யார்... எங்கிருந்து வந்தவர்... எங்கள் ஆட்சியின்போது எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள் முதல்வர் ஸ்டாலினே எழுந்து பதில் சொல்வார். விஜய் ஏதாவது பதில் சொல்கிறாரா... உள்ளே `ஊழல், ஊழல்’ என்று பேசுகிறார்கள். வெளியே, எல்லாவற்றுக்கும் பர்சன்டேஜ் பேசி பணம் கேட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.”
“எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?”
“ஓரளவுக்கு நன்றாகச் செய்கிறார். பொறுமையாக பதில் சொல்வதைப் பார்க்கும் போது அவரைப் பாராட்டியாக வேண்டும். விஜய் அரசு வெற்றிபெற்றதுக்கு தி.மு.க-வின் வாக்குகள்தான் காரணம். அண்ணா காலத்திலிருந்து சிறுபான்மையினருக்காக நாங்கள் போராடிவருகிறோம். அவர்களும் விஜய்க்காக வாக்களித்துவிட்டார்கள். எங்கள் திட்டங்களுக்குப் பெயர் மாற்றி அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, தி.மு.க மீண்டு வரும்.’’
