Politics
மல்லுக்கட்டு! இடைத்தேர்தல் திகுதிகு...!

தமிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒன்று! தற்போது தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், கோட்டை வட்டாரத்தில் மீண்டும் தேர்தல் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளது. 2026, சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. வெற்றிபெற்று ஆட்சி யமைத்த கையோடு, அ.தி.மு.க.விலிருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததால் இந்த காலியிடங்கள் உருவாயின. ஆறு மாத கால அவகாசத்திற்குள் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்பதால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த இடைத்தேர்தல் களம், வரும் நாட்களில் தமிழக அரசியலின் போக்கை தீர்மானிக்கும் முக்கியப் புள்ளியாக மாறக்கூடும்.
வழக்கமாக இடைத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் கட்சிகள் விருப்ப மனு வாங்குவது, வேட்பாளர் பட்டியல் தயார் செய்வது என மந்த கதியில் இயங்கும். ஆனால் இந்த முறை, தேர்தல் அறிவிப்பு வந்த கையோடு களத்தில் பாய்ந்து வேட்பாளர்களை அறிவித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது எதிர்க்கட்சியான தி.மு.க. சட்டத்துறை துணைச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐ.பரந்தாமனை மதுராந்தகத்திலும், வழக்கறிஞர் சுகன்யாவை தாராபுரத்திலும் நிறுத்தி, முதல் ஆளாக பிரச்சாரக்களத்தில் கெத்தாக காலடி எடுத்து வைத்திருக்கிறது அறிவாலயம்.
தி.மு.க.வின் இந்த அதிவேக நகர்வைக்கண்டு ஆளுங்கட்சியான த.வெ.க.வும் சளைக்கவில்லை. ஏற்கனவே அ.தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேலை மதுராந்தகத்திலும், சத்யபாமாவை தாராபுரத்திலும் த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக முதல்வர் விஜய் களமிறக்கியுள்ளார். 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி' என்ற புதிய பெயரிலான கூட்டணிக் கட்சிகளின் முழு ஆதரவோடு இந்த இரண்டு தொகுதிகளையும் தட்டியாக வேண்டுமென்பதில் ஆளுங்கட்சி தரப்பு மிகத்தீவிரமாக காய்களை நகர்த்திவருகிறது.
இன்னொரு பக்கம், தங்களுக்குரிய பாரம்பரியமான இரட்டை இலை வாக்கு வங்கியை மீண்டும் நிரூபித்துக்காட்டும் கட்டாயத்தில் இருக்கிறது அ.தி.மு.க. சற்று நிதானித்து வேட் பாளர் தேர்வை நடத்திய அ.தி.மு.க., மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு கணிதா சம்பத்தையும், தாராபுரம் (தனி) தொகுதிக்கு பானுமதியையும் வேட்பாளர்களாக அறிவித்துள் ளது. அ.தி.மு.க. மகளிரணி மாநில இணைச்செயலாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான கணிதா சம்பத், கடந்த 1996-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2001-2006-ல் திருப்போரூர் சட்ட மன்றத் தொகுதியிலும், 2011-2016-ல் மதுராந்தகம் தொகுதியிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 2021 மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல்களில் மதுராந் தகம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது இடைத்தேர் தலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தாராபுரத்தில் களமிறக்கப்பட்டுள்ள பானுமதி, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளராக உள்ளார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கணிதா சம்பத்தின் அரசியல் அனுபவமும், உள்ளாட்சி அமைப்புகளில் அனுபவமிக்க பானுமதியின் மக்கள் தொடர்பும், அ.தி.மு.க.வுக்கு துரோகமிழைத்து த.வெ.க.வில் களமிறங்கியுள்ளவர்கள் மீது மக்கள் மத்தியில் எழும் எதிர்ப் பும், கழகத்திற்கு வெற்றியைத் தேடித்தரும் என அ.தி.மு.க. எதிர் பார்க்கிறது. இதன்மூலம் இடைத் தேர்தல் களம் இப்போது முக் கோணப் போட்டியாக மாறியிருக் கிறது.
வழக்கம்போல தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கும் நாம் தமிழர் கட்சியும் தனது வேட்பாளர்களை களமிறக்கத் தயாராகிவருகிறது.
முனைப்புடன் பா.ஜ.க.!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை லேசாக எடுத்து கொள்ளக்கூடாது, அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க. தேர்தல் பணிக்குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. த.வெ.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மீண்டும் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இந்த 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால் இடைத்தேர்தலில் மீண்டும் இத்தொகுதிகளை கைப்பற்ற அ.தி.மு.க. முனைப்பு காட்டுகிறது. அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களுக்கு பா.ஜ.க., அ.ம.மு.க. கட்சிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க பா.ஜ.க. சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக பா.ஜ.க. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். மதுராந்தகம் சட்டசபை தொகுதியின் பொறுப்பாளர்களாக பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் மா.வெங்கடேசன், மாவட்ட தலைவர் பிரவீன் குமார், மாநில செயற்குழு உறுப்பினர் வி.ஏ.டி. கலிவரதன் ஆகியோர் செயல்படவுள்ளனர். தாராபுரம் தொகுதியின் பொறுப்பாளராக மாநில செயலாளர் ஆர்.நந்தகுமார், பா.ஜ.க. மருத்துவப் பிரிவு மாநில அமைப்பாளர் எஸ்.டி.பிரேம்குமார் உள்ளிட்டோர் செயல்பட உள்ளனர்' எனக் கூறப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.விலிருந்து விலகி த.வெ.க.வுக்குச் சென்ற வேட்பாளர்களை வீழ்த்த தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் முழு பலத்தையும் பிரயோகிக்கத் திட்டமிட்டுள்ளன. மறுபுறம், ஆளுங்கட்சியின் அதிகார பலத்தோடும், கூட்டணிக் கட்சிகளின் பலத்தோடும் தொகுதிகளைத் தக்கவைக்க விஜய் தரப்பு மல்லுகட்டுகிறது. எனவே இடைத்தேர்தல் களத்தில் அனல் பறக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)