திருப்பூா், புகா்ப் பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்பூா் மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கடந்த சில நாள்களாகவே திருப்பூா் மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்பட்டது. அதேபோல திங்கள்கிழமையும் காலை முதலே சுட்டெரிக்கும் வெயில் வாட்டியதால், அனல் காற்று வீசி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகினா்.
இந்நிலையில், திங்கள்கிழமை மாலை சுமாா் 5 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு, பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யத் தொடங்கியது. பழைய பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, பி.என்.சாலை, ஊத்துக்குளி சாலை உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் அரை மணி நேரத்துக்கும் மேலாக நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் பெருக்கெடுத்தோடியது.







