Lifestyle and human interest
கரூர் சுற்று வட்டார பகுதியில் காற்றுடன் மழை

கரூர்:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை காற்றுடன் கூடிய மழை பெய்தது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில், மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு, சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் கடந்த, 13ம் தேதி தெரிவித்திருந்தது. கரூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் ஓரளவுக்கு மழை பெய்தது. மேலும் வெயிலின் தாக்கம் கடந்த, ஒரு வாரமாக அதிகரித்து இருந்தது.இந்நிலையில் நேற்று மாலை, 6:00 மணி முதல் கரூர் நகரம், திருகாம்புலியூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், கொளந்தானுார், புலியூர், வெண்ணைமலை, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், காற்றுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்தது.இதனால், திருச்சி சாலை தெரசா கார்னர், சுங்ககேட், பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலை, பழைய திண்டுக்கல் சாலை, பழைய அரசு மருத்துவமனை சாலை, வாங்கல் சாலை ரயில்வே பாலம், கோவை சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நேற்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்ததால், குளிர்ந்த காற்று வீசியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
