விமானத்தின் டயர் கழன்றது; மேற்கூரை உடைந்து பயணிகள் மீது விழுந்ததால் பரபரப்பு
மஷாத்: ஈரானில் விமானத்தின் டயர் கழன்றதால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக, உட்புற மேற்கூரை இடிந்து, பயணிகள் மீது விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
ஈரானின் வடகிழக்கு பகுதியில் உள்ள மஷாத் நகரில் இருந்து கெர்மன்ஷா நோக்கிப் புறப்பட்ட செபெஹ்ரான் ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே டயர் கழன்றுவிட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட இன்ஜின் பிரச்னையால், விமானத்தில் கடுமையான அதிர்வு ஏற்பட்டது. இதனால், விமானம் மீண்டும் மஷாத் விமான நிலையத்திற்கே பத்திரமாக திரும்பி வந்து தரையிறங்கியது. விமானம் கடுமையாக அதிர்ந்ததால், கேபின் பகுதியில் இருந்த உட்புற மேற்கூரைப் பகுதிகள் கழன்று விழுந்தன. மேலும், உடமைகள் வைக்கப்படும் பெட்டிகளும் திறந்து, அதில் இருந்த பொருட்களும் பயணிகள் மீது விழுந்தன.
ஆரம்பகட்ட தகவலின்படி பயணிகள் மற்றும் ஊழியர்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் இன்னும் விரிவான அறிக்கையை வெளியிடவில்லை.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)





