சிவகாசி, ஸ்ரீவி., பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் மூவர் பலி மரக்கிளையில் சிக்கிய தொழிலாளி உடல்
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மீனம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்துார் கூனம்பட்டி பட்டாசு ஆலைகளில் நேற்று நடந்த வெடி விபத்துகளில் மூவர் பலியாகினர். 5 பேர் காயமடைந்தார். இதில் பலியான ஈஸ்வரனின் உடல் சிதறி மரக்கிளையில் சிக்கியது. தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர்.
சிவகாசி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. இவருக்கு மீனம்பட்டியில் வடிவேல் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 70 க்கும் மேற்பட்ட அறைகளில் 150க்கும் ஏற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். நேற்று காலை பிளாட்பார்மில் காய வைக்கப்பட்டிருந்த மணி மருந்து வேதியியல் மாற்றம் காரணமாக வெடித்ததில் விபத்து ஏற்பட்டது. அதனருகே மரத்தடியில் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்துார் அருகே குன்னுாரைச் சேர்ந்த ஈஸ்வரன் 56, பலியானார். சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மணி மருந்து வெடித்த நிலையில் 100 அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது. அருகில் இருந்த 2 மரங்களில் தீ பரவியதில் முற்றிலும் சேதம் அடைந்தது. விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் பெண் தொழிலாளி ஒருவர் மயக்கமடைந்தார்.



