சாத்துார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி

சாத்துார்: சாத்துார் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில், மாடசாமி, 33, என்பவர் பலியானார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசக்தி, 52. இவருக்கு சொந்தமான 'சின்னத்தம்பி பைரோடெக்ஸ்' பட்டாசு ஆலை, ஒத்தையாலில் உள்ளது. இங்கு, 15க்கும் மேற்பட்ட அறைகளில், வெடிகள் தயாரிக்கப்படுகிறது.
மீனம்பட்டியைச் சேர்ந்த, ஆறு தொழிலாளர்கள் நேற்று காலை, 7:30 மணிக்கு, கெமிக்கல் அறையில் மருந்து கலவை தயார் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, டீ குடிப்பதற்காக, ஐவர், அறையை விட்டு வெளியே சென்றநிலையில் மாடசாமி மட்டும் பணி செய்தார்.
அப்போது, உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதில், இரு அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி மாடசாமி பலியானார். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மூன்று மணி நேரம் தாமதத்திற்கு பின், மாடசாமி உடல் மீட்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் சகோதரியும், ஆலை உரிமையாளருமான ஜெயசக்தி, அவரது மகள் செல்வமாரி, முரளீஸ்வரன், சூர்யபிரகாஷ் ஆகியோர் மீது சாத்துார் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.
இதில், சூர்யபிரகாஷ் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
