விதிமுறைகளை பின்பற்றாததால் ஒரே நாளில் 3 வெடி விபத்துக்கள் திருந்துவார்களாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள்
சிவகாசி, செப். 5 - விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு உற்பத்தி செய்ததன் விளைவாக நேற்று முன் தினம் மட்டும்
விதிமுறைகளை பின்பற்றாமல் பட்டாசு உற்பத்தி செய்ததன் விளைவாக நேற்று முன் தினம் மட்டும் மூன்று வெடி விபத்துக்கள் ஏற்பட்டு 3 பேர் பலியாகியுள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்வது ஒருபுறம் இருந்தாலும் உரிமையாளர்கள் விதிமுறைகளை பின்பற்றி உற்பத்தி செய்வதால் மனித உயிர்கள் பலியாவது தடுக்கப்படுமென மக்கள் கருதுகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதியில் நாக்பூர் டி.ஆர்.ஓ., சென்னை உரிமம் பெற்ற 1100 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. பட்டாசு ஆலைகளில் எப்போதாவது எதிர்பாராமல் வெடி விபத்து ஏற்படுவது இயல்புதான். அவ்வாறு ஏற்படும் வெடி விபத்தில் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால் ஆலைகளில் பாதுகாப்பின்றி, விதி மீறல்களுடன் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதால் ஏற்படும் வெடி விபத்தில் உயிர் பலி ஏற்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஆலைகளில் விதிமீறி பட்டாசு தயாரித்ததால் ஏற்பட்ட வெடி விபத்தில் பலரும் பலியாகி உள்ளனர். இந்த வெடி விபத்துகளுக்கு முக்கிய காரணம் பட்டாசு ஆலைகள் விதிமீறி இயங்கியதே.
நேற்று முன்தினம் ஒரே நாளில் சிவகாசி ,ஸ்ரீவில்லிபுத்துார் ,சாத்துார் உள்ள ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்து மூன்று பேர் பலியாகினர். மரத்தடியில் பட்டாசு தயாரிக்க கூடாது என விதிமுறை இருந்தும் அதனை மீறி பட்டாசு தயாரிக்கின்றனர். இதே போல் பட்டாசு ஆலை நடத்துவதற்காக உரிமம் பெற்ற ஒருவர் தனது ஆலையை மற்றவருக்கு குத்தகைக்கு விடுவது இயல்பு. இதுவே விதிமீறல் என்ற நிலையில் , குத்தகைக்கு எடுத்த நபர் ஆலையில் உள்ள அறைகளை பல்வேறு நபர்களுக்கு தனித்தனியாக உள் குத்தகைக்கு விடுகின்றார். குத்தகைக்கு எடுத்த நபர் அதிக ஆட்களை வைத்து பட்டாசு தயாரிப்பதால் விபத்து ஏற்படுகிறது. இதேபோல் மணி மருந்து இருப்பு வைக்க கூடாது என தெரிந்தும் ஒரு சில ஆலைகளில் உரிமையாளர்கள் இருப்பு வைக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு, உள் குத்தகைக்கு விடக்கூடாது உள்பட 10 விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவேன் என, ஒவ்வொரு பட்டாசு ஆலை உரிமையாளர்களிடமும் உறுதிமொழி பத்திரம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் 2024 டிச. ல் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இது குறித்து ஆய்வு செய்யாததால் விபத்து நடைபெறுவது தொடர் கதையாகவே உள்ளது. எனவே பட்டாசு ஆலைகளில் உரிமையாளர்கள் தாங்களாகவே தவறுகளை சரி செய்து விதிகளை மீறாமல் உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.