நிதி ஒதுக்கீடு செய்யாததால் தவிக்கும் கனவு இல்ல திட்ட பயனாளிகள்
தேனி: தமிழகத்தில் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் கட்ட தேர்வான பயனாளிகள் 35 ஆயிரம் பேர் வீடு கட்ட பணி ஆணை பெற்று பணிகளை துவங்கியுள்ளனர். ஆறு மாதங்களாக நிதி ஒதுக்காததால் கடன் வாங்கி வீடு கட்டியோர் பரிதவிக்கின்றனர்.
தி.மு.க., ஆட்சியில் ஊரகப்பகுதியில் அரசு சார்பில் கனவு இல்ல திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் 360 சதுர அடியில் வீடுகள் அமைக்க அரசு சார்பில் தகுதியான பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் வழங்கப்படும். இப்பணம் 4 தவணையாக கட்டுமானப்பணிகளை பொருத்து வழங்கப்படும். 2026 ஜன., பிப்.,ல் அவசர கதியில் பயனாளிகள் தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் 35ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
இந்நிலையில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்ததால் முதற்கட்ட நிதி கூட ஒதுக்கவில்லை. ஆனால் பயனாளிகள் அரசின் நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கியும், சேமிப்பில் இருந்த பணத்திலும் பணிகளை துவக்கினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஜன., பிப்.,ல் பணி ஆணை பெற்றவர்களுக்கு இதுவரை முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இத்திட்டத்தில் தேர்வான பல வீடுகள் அஸ்திவார பணியுடனும், சில வீடுகள் சுவர் எழுப்பிய நிலையிலும் அரைகுறையாக நிற்கின்றன.





