Politics
கனவு இல்ல திட்டத்தில் வீடு நிதி விடுவிப்பதில் தாமதம்
உடுமலை: கனவு இல்லத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்குக் கடந்த ஓராண்டாக நிதி விடுவிக்கப்படாததால், பயனாளிகள் நிதி நெருக்கடிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
முந்தைய ஆட்சியில் ‘கனவு இல்லத் திட்டம்’ தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு, மாவட்ட வாரியாகப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் வீடுகளைக் கட்டத்தொடங்கினர்.
பெரும்பாலான இடங்களில் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடந்த ஓராண்டாக அரசிடமிருந்து நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால் தொடர் நிதிப் பற்றாக்குறையால் ஏராளமான வீடுகள் முழுமையடையாமல் முடங்கிக் கிடக்கின்றன.
பயனாளிகள் கூறுகையில், ‘‘கட்டுமானப் பணிகளின் நிலைக்கு ஏற்ப நிதி விடுவிக்கப்படும் என்பதால், அரசு உதவித்தொகை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வட்டிக்குக் கடன் வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் பணிகளை தொடர்ந்தோம்.
ஆனால், நிதி கிடைக்காததால் தற்போது கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம். தற்போதைய அரசு நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவித்து, எங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.