Politics
நிதி ஒதுக்கீடு இன்றி கனவு இல்ல திட்ட பயனாளிகள் 750 பேர் தவிப்பு
தேனி:மாவட்டத்தில் கடந்த ஜன., பிப்.,ல் கனவு இல்ல திட்டத்தில் பணி ஆணை பெற்றுள்ள 750 பேர் நிதி ஒதுக்கீடு செய்யாததால் அவதியடைந்துள்ளனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியில் ஊரக பகுதியில் வீடு கட்ட கனவு இல்ல திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 360 ச.அடியில் வீடு அமைக்க ரூ.2.5 லட்சம் வழங்கப்பட்டது. கடந்த ஜன., பிப்., 750 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. ஆனால், நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அரசு பணம் ஒதுக்கீடு செய்யும் என நம்பி பலர் பணியை துவங்கினர். ஆனால் தேர்தல் நடத்தை விதியால் முதல் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆட்சி மாற்றம் நிகழ்ந்து 3 மாதங்களுக்கு மேல் ஆன நிலையிலும் இதுவரை முதல்கட்ட நிதி ஒதுக்கீடு செய்யாததால் இத்திட்டத்தில் பணி ஆணை பெற்ற 750 பேர் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'இது தொடர்பாக ஆய்வு செய்துள்ளோம். பணி ஆணை பெற்ற 364 பேர் வீடு கட்டுமான பணி பாதிக்கு மேல் நிறைவு செய்துள்ளனர். 164 பேர் அஸ்திவார் பணியோடு நிறுத்தி உள்ளனர். மற்றவர்கள் இன்னும் பணி துவங்கவில்லை. இந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி உள்ளோம்,' என்றனர்.