Politics
கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு பணம் வராததால் பயனாளிகள் அவதி
எருமப்பட்டி:'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் வீடு கட்டிய பயனாளிகளுக்கு, இதுவரை தவணை தொகை வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது.
குடிசை இல்லா வீடுகளை உருவாக்கும் வகையில், 'கலைஞர் கனவு இல்லம்'
திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பல
ஆயிரக்கணக்கான வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகள் பெற்ற
பயனாளிகள், முழு தொகையை பெற்ற நிலையில் தேர்தல் நேரத்தில் ஏராளமான
பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கப்பட்டது. பணி ஆணை பெற்ற
பயனாளிகள், 'கலைஞர் கனவு இல்லம்' திட்ட பணிகளை துவக்கினர். பணிகள்
துவங்கியதும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், 'கலைஞர் கனவு
இல்லம்' வீடுகள் கட்ட துவங்கிய பயனாளிகள், அந்தந்த பஞ்.,
செயலாளர்களிடம் நேரில் சென்று வீடு கட்டும் பணி துவங்கப்பட்டது
எனவும், வேலை செய்வதற்காக முதல் தவணை பணம் எப்போது வரும் என
கேட்டனர். ஆனால், அதிகாரிகள், 'வீடு கட்டும் பணியை தொடர்ந்து
மேற்கொள்ளுங்கள், தேர்தல் முடிந்ததும் வங்கி கணக்கில் பணம் வரவு
வைக்கப்படும்' என, தெரிவித்தனர். இதை நம்பிய பயனாளிகள் வீடு கட்டும்
பணிகளை தொடங்கிய நிலையில், தற்போது ஆட்சி மாற்றத்தால், 'கலைஞர் கனவு
இல்லம்' திட்ட பயனாளிகளுக்கு, ஒரு தவணை கூட பணம் வரவு வைக்கவில்லை.
அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட ஆணை, வீடு
கட்டியவர்களின் பட்டியல், வங்கி கணக்குகள் சரி பார்க்கப்பட்டு
வருகிறது. எனவே, வீடு கட்டியவர்களுக்கு விரைவில் பணம்
வழங்கப்படும்' என்றார்.