Lifestyle and human interest
வறுமையில் இருந்து 25 கோடி பேரை மீட்டவர் பிரதமர் மோடி: மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்

சென்னை: ''கடந்த 12 ஆண்டுகளில், 25 கோடி பேரை, வறுமையில் இருந்து மீட்டவர் பிரதமர் மோடி,'' என, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் 76வது பிறந்த நாள், நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு மோடியின் பிறந்த நாளை, ஆசிர்வாத தீபம் ஏற்றி கொண்டாடினர்.
சென்னை, துார்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலக வளாகத்தில், ஆசிர்வாத தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் கவர்னர் தமிழிசை, ஜவுளி தொழில் வர்த்தகர் நல்லி குப்புசாமி, உள்ளிட்டோர் தீபம் ஏற்றினர்.
குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, சென்னையில் ஓடும் கூவம் நதி போல மாசடைந்திருந்த சபர்மதி நதியை துாய்மைப்படுத்தி, மக்களுக்கு குடிநீராக கொடுத்தார். நர்மதா அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்தி, பல கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்தவர் மோடி.
இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில், பிரதமர் மோடி ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 2047ல், இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை, மோடி நிச்சயம் நனவாக்குவார். பிரதமர் மோடி நுாறாண்டு வாழ வேண்டும் என்பதற்காக, ஆசிர்வாத தீபம் ஏற்றுகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.