Religion
புறக்கணிப்பு! - கொந்தளிப்பில் மதுரை!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியை வெகுவிமர்சையாக நடத்துவதற்கு ஆயத்தமாகிவரும் நிலையில், குடமுழுக்கு நிகழ்ச்சியில் தமிழ் மொழியை ஒதுக்குவதற்காக நடக்கும் சூழ்ச்சியைக் கண்டு தமிழ் ஓதுவார்கள் போர்க்கொடி தூக்கியுள்ளார்கள்! பொதுவாக, ஆகம விதிகளின்படி கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, 2021ஆம் ஆண்டிலேயே மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்திருக்க வேண்டும். கடந்த 2018ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தால் வீரவசந்தராயர் மண்டபம் முற்றிலும் சேதமடைந்தது. மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் மக்கள் கூடுவதற்கு அச்சமான சூழல் நிலவியது. அடுத்ததாக, தகுந்த திருப்பணிக் கற்கள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. அதனால் மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு தள்ளிப்போனது. அதன் பிறகு, 17 ஆண்டுகளுக் குப் பிறகு தற்போதைய திருப்பணிகள் மற்றும் பூர்வாங்க பூஜைகள் நிறைவுபெறும் நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழில் நடத்த வேண்டும் என தெய்வ தமிழ்ப் பேரவையினர் மதுரையில் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம் போன்றவையும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கோபுரக் கலச நன்னீராட்டு விழா, கருவறை பூஜை, வேள்விச் சாலை ஆகிய மூன்றிலும் தமிழில் திருமுறைகள், தமிழ் வேத மந்திரங்கள் ஓத வேண்டும் என தமிழ் வேத ஆகம பாடசாலை நிறுவனரும், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினருமான சிம்மம் சத்தியபாமா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆகஸ்ட் 24-ல், வழங்கிய தீர்ப்பில், "மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் கோபுரக் கலசம், கருவறை பூசை, வேள்விச்சாலை ஆகிய மூன்றிலும் சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஓதும்போது, தமிழ் திருமுறை ஓதுவார்கள் ஒருபக்கமாக நின்று தமிழ் மந்திரங்களை ஓத அனுமதிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த தீர்ப்பின்படி கோயில் நிர்வாகம் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், '186 யாக சாலைகளில் வெறும் 50 யாக சாலை களை தமிழ் தீண்டாமை போல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தமிழ் மொழி சரிபாதி விமானத்திலும், கருவறையிலும் ஒலிக்க வேண்டும். வேள்விச் சாலையில் சரிபாதி தமிழ்வழி பூஜைக்கு ஒதுக்க வேண்டும். சங்கராச்சாரியாருக்கு முதலிடம் வழங்கக்கூடாது. தமிழ்ச்சங்கம் வளர்த்த மதுரை மண்ணின் அடையாளமாக விளங்கும் மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் தமிழ் வழிபாட்டுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும். தமிழ்நாடு முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் தலையிட்டு, குடமுழுக்கு நிகழ்வில் தமிழில் வழிபாடுகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்' என முழக்கங்கள் போட்டனர். இதில் மூங்கிலடிகளார், சத்யபாமா, வழக்கறிஞர் வாஞ்சி நாதன், பசும்பொன்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்திற்கு தலைமைதாங்கிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நம்மிடம் பேசியபோது, "மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கில் தமிழுக்கு உரிய இடம் வழங்க வேண்டும். தமிழன் கட்டிய, தமிழர்கள் காணிக்கை, உண்டியல் பணம் கொடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவில் தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும். யாக சாலையில் தமிழ்வழி வழிபாட்டுக்கு சரிபாதி இடம் ஒதுக்கவேண்டும், விமானம் மற்றும் கருவறையிலும் தமிழ் வழிபாட்டு முறை இடம்பெற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதற்கும், தமிழில் அர்ச்சனை செய்வதற்கும் தடை இருந்தால், தமிழில் குடமுழுக்கு எங்கு நடத்துவது? தமிழில் குடமுழுக்கு நடத்தக்கூடாது என எந்த ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது? என்பதை சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் விளக்க வேண்டும். இதுகுறித்து பொது இடத்தில் விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். தமிழகத் தில் கோவில் வழிபாடுகளில் தமிழுக்கு உரிய இடம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அரசி அங்கயற் கண்ணியான மதுரையின் அரசிக்கு தமிழ் மன்னர்களால் கட்டிய கோயில் இது. இந்த விழாவை பொருத்தவரை இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இருந்தும், ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலுள்ள நிர்மல்குமாரே நடத்துகிறார். முதலில் அவர் தலையிட்டதால் தான் அழைப் பிதழில் அறங்காவலர் குழு தலைவர்கள் பெயர்கள் போடப்படவில்லை. அடுத்து, மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜனுக்கு கோவில் நிகழ்வுகளில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. பெண் என்பதாலும், கணவரை இழந்தவர் என்பதாலும் அவரை ஓரங்கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதன் பின்னணியிலும் அமைச்சர் நிர்மல் குமாரே இருக்கிறார். பெண்களை இழிவு படுத்தும் வகையிலான எந்த நடைமுறையும் இருக்கக்கூடாது. இது தமிழர் பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் எதிரானது. கோவில் நிர்வாகத்தில் அனைவருக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு வந்த செய்தி, உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் முக்கிய விருந்தினராக சங்கராச்சாரியார் வருவதால் அங்கு தமிழில் வேத மந்திரம் ஓதுவது அவருக்கு பிடிக்காது என்பதால் அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவின் பேரில் தமிழ் புறக்கணிக்கபடுவதாகத் தெரிகிறது.
அதேபோன்று 186 யாக சாலைகளில் வெறும் 50 யாக சாலைகளை தமிழ் தீண்டாமை போல ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தமிழ் மொழி சரிபாதி விமானத்திலும், கருவறையிலும் ஒலிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் இந்து சமய அற நிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். மதுரையை த.வெ.க. அரசு போர்க்களமாக மாற்ற வேண்டாம். தொடர்ந்து செப்டம்பர் 17ஆம் தேதிக்குமுன் ஒட்டுமொத்த தமிழர்களையும் திரட்டி மதுரையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கிறோம்'' என்றார்.
தமிழ்நாட்டில் கடவுள் வழிபாட்டில் தமிழ் மொழியையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்பதற்கே தமிழர்கள் போராடவேண்டி யுள்ளது வேதனையான விசயம்தான்.
இதில் தமிழ் உணர்வாளர்கள், இயக்கங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரலெழுப்ப வேண்டும். தமிழ்நாட்டில் மதுரையை குறிவைத்து இந்துத்வா இயக்கங்கள் இறங்கியிருக்கும் சூழலில், சங்கம் வளர்த்த மதுரையில், மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில், முதல்வர் விஜய்யின் அரசு தமிழ் மொழியை ஓரங்கட்டுவதற்கு எதிராகக் களமிறங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)