Religion
“கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக உள்ளன” - அறங்காவலர் குழுத் தலைவர் பேட்டி!

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் குடமுழுக்கு விழா நாளை மறுநாள் (17.09. 2026) விமரிசையாக நடைபெற உள்ளது. இந்நிலையில் மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “எங்களை எந்தச் செயல்பாட்டிலும் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாகவும் அரசியல் தலையீட்டுடனும் கூடிய கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
விழா சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டிய நேரத்தில், பக்தர்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு வழிகாட்டு நடைமுறைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அனுமதி அட்டைகளைப் பொறுத்தவரை, 9,000 எனவும், 11,000 எனவும் தினமும் வெவ்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. அதிலும், மிகவும் மதிக்கத்தக்க வகையில் உள்ள நன்கொடையாளர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு அழைப்பு சென்று சேர்ந்துள்ளதா என்பது குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.
யாரெல்லாம் இதில் விடுபடக்கூடாது என்பதற்கான பட்டியலை நாங்கள் தயாரித்து வைத்துள்ளோம். இந்த நிலையில், அதனைக் கோவில் நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. இன்று நேற்றல்ல; 1963ஆம் ஆண்டு காலஞ்சென்ற பி.டி. ராஜன் தலைமையில் இத்திருத்தலத்தின் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்று, மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றிய குடும்பத்தின் வழிவந்த எங்கள் குடும்பத்தில் என்றைக்குமே அரசியலையும் ஆன்மீகத்தையும் நாங்கள் இணைத்துப் பார்த்ததே இல்லை.
ஆன்மீகத் திருப்பணிகள் எவ்வளவு தூரம் சீரும் சிறப்புமாக நடைபெற வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாங்கள்தான், அதில் அரசியல் கலந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருப்போம். பாரம்பரியமாக இறைவனுக்குத் தொண்டு செய்து வருகிறோம். எதிர்வரும் 17.09.2026 காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் திருக்குட நன்னீராட்டு திருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)