Politics
இங்கிலாந்து பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் விஜய்

ஆறு நாட்கள் அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து சென்றிருந்த முதலமைச்சர் விஜய், தனது பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பினார். லண்டனில் இருந்து புறப்பட்ட அவர், இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
முதலமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, முதலீட்டு ஈர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இந்தப் பயணம் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பயணத்தின்போது பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குழுமம், தமிழ்நாட்டில் தனது உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்க உறுதியளித்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனம், தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையம் ஒன்றை அமைக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் மின்மாற்றிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட் சென்ற விஜய்
இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் விஜய், சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டைப் பார்வையிட்டார்.
அங்கு நடைபெற்ற லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை அவர் தொடங்கி வைத்தார். அதில் நடிகர் அஜித்தும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
முதலீட்டு ஈர்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பான சந்திப்புகளுடன், சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட் உள்ளிட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்றுவிட்டு முதலமைச்சர் விஜய் சென்னை திரும்பியுள்ளார்.