Politics
தமிழகத்தில் 11 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் பன்னாட்டு நிறுவனம்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

லண்டன்: சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் தமிழகத்தில் 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் விஜய் தலைமையில் கையெழுத்தானது.
முதல்வர் விஜய், முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றுள்ளார். அந்த வகையில், இன்று 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான ஒப்பந்தம் அவர் முன்னிலையில் கையெழுத்தானது. சம்வர்தனா மதர்சன் இன்டர்நேன் என்ற நிறுவனம் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, தளவாட வசதி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய உள்ளது. இதன் வாயிலாக 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதற்கான ஒப்பந்தத்தில், தமிழ்நாடு வழிகாட்டுதல் துறை நிர்வாக இயக்குனர் தீபக் ஜேக்கப், சம்வர்தனா நிறுவன பிரிவு தலைவர் பேரி பெயின்டர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தமிழகத்தில் உலகளாவிய திறன் மையங்களை விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில், 2,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழகத்தில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
முதல்வர் விஜய் முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா மற்றும் தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொண்டனர். இவ்வறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மின்சாதன உற்பத்தித் துறையின் அடுத்த கட்ட வளர்ச்சியாக, திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 'வில்சன் பவர் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தொழில்நுட்ப இயக்குனர் ஹரி கிருஷ்ணா மலேபதி, குழும நிதியியல் இயக்குனர் டென்னிஸ் சோர்பி ஆகியோரும், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், ஆகியோர் கையெழுதிட்டு, ஒப்பந்தம் பரிமாறிக் கொண்டனர்.