Politics
ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடு : புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டனுக்குக் கடந்த 10ஆம் தேதி(10.09.2026) இரவு புறப்பட்டுச் சென்றார். இந்த அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, சுமார் ரூ.11ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் விஜய்யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இங்கிலாந்து, லண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)