Religion
ராமநாதபுரத்தில் 61 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று கரைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 61 விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நொச்சியூருணியில் கரைத்தனர்.
ராமநாதபுரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா நடந்தது. ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் 61 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டனர். அனைத்து விநாயகர் சிலைகளும் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் முன்பு டிராக்டரில் அணிவகுத்து நின்றன. ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி கலந்து கொண்டனர். பொன் பாலகணபதி பேசுகையில், ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் அவர்கள் அடிமைகள் போல் உள்ளனர். ஹிந்துக்களுக்கு என பாதுகாப்பான நாடாக இந்தியா மட்டுமே உள்ளது. ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார். தேசிய தென்னை வளர்ச்சி வாரிய சேர்மன் சுப.நாகராஜன் விநாயகர் சிலை ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அரண்மனை நோக்கி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நொச்சியூருணியில் கரைத்தனர். சுமார் 3 மணி நேரம் நடந்த ஊர்வலத்தில் வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வழிபட்டனர். ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவர் ஆடல் அரசன், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், மாவட்ட பொதுச் செயலளார்கள் சண்முகநாதன், குமார், ஹிந்து முன்னணி நகர் தலைவர் க.பாலமுருகன், நகர் பொதுச் செயலாளர் ர.பாலமுருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.–––