Religion
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் அக்னி தீர்த்த கடலில் கரைத்தனர்.
நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர். இதையடுத்து நேற்று ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் வர்த்தகன் தெரு, வேர்க்கோடு, இந்திரா நகர், எம்.ஆர்.டி., நகர், புதுரோடு, பெரிய பள்ளிவாசல் தெரு, மல்லிகை நகர் உள்ளிட்ட 30 இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு மகா தீபாராதனை நடந்தது.
இதில் ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், ராமேஸ்வரம் நகர் தலைவர் நம்புராஜன், துணைத் தலைவர் குமார், மாவட்ட பொறுப்பாளர்கள் வீரசவுந்திரராஜன், மேகநாதன், நாராயணன், ஆட்டோ முன்னணி செயலாளர் குமார், கர்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின் டிராக்டர், லாரிகளில் விநாயகர் சிலைகளை ஏற்றிக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டு கோயில் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் கரைத்தனர்.
*கீழக்கரை அருகே கிழக்கு மங்களேஸ்வரி நகரில் 9 அடி உயர விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை கிழக்கு மங்களேஸ்வரி நகர் மன்னார் வளைகுடா கடலில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை தலைவர் செல்வம், செயலாளர் பால்ராஜ் மற்றும் கிழக்கு மங்களேஸ்வரி நகர் முத்தரையர் சங்கத்தினர் செய்திருந்தனர்


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
