Politics
Exclusive | “முதலமைச்சர் விஜய் நேற்று மாலை முக்கிய மெசேஜ் அனுப்பினார்…” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்...
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நியூஸ்18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “முதலமைச்சர் விஜய் நேற்று மாலையே ஒரு முக்கிய மெசேஜ் அனுப்பினார்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் குறித்து நேற்று (7ஆம் தேதி) முதலமைச்சர் விஜய் பதிலுரை கொடுத்தார். அப்போது திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த முதலமைச்சர் விஜய், மிசா கைதுகள் குறித்தும் பேசினார்.
அப்போது, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மிசாவில் கைதானதை குறித்து சைகை செய்து முதலமைச்சர் விஜய் பேசினார். இதற்கு திமுக தலைவர்கள் உட்பட, தவெக அரசு ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு கட்சியினரும் முதலமைச்சர் விஜயை விமர்சித்திருந்தனர்.
குறிப்பாக தவெக அரசுக்கு வெளியே இருந்து ஆதரவு அளித்து வரும் சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம், “அவசர நிலை காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக மிகப்பெரிய போராட்டங்களும் அதன் காரணமாக அடக்குமுறைகளும் அத்துமீறல்களும் நடந்தது நாடறிந்த வரலாறு. ஆனால் அவசரநிலை காலத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு அவரது தாடை உடைக்கப்பட்டது. உருவக் கேலி செய்யும் விதமாக பேசுவது யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது. அதை முதலமைச்சரே செய்திருப்பது பொறுப்பற்ற செயலாகும்” என காட்டமாக விமர்சித்திருந்தார்.
இதேபோல் சிபிஎம் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன், “மிசா தாக்குதலை நியாயப்படுத்தி, சொச்சைப்படுத்துகிறார் முதலமைச்சர். அதே தாக்குதலை இவர் அரை மணி நேரமாவது தாங்கிக் கொள்வாரா?” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், “எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை” என விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நியூஸ்18 தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “பேரவையில் அனைவருக்கும் புது அனுபவமாக இருந்தது. எவ்வளவுதூரம் ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்ல வேண்டுமோ, அவ்வளவு தூரம் ஆக்கப்பூர்வமாக கொண்டுச் சென்றோம். எதிர்க்கட்சிகளுக்கு, இந்த அரசு மக்களின் முழு ஆதரவோடு இருக்கிறது என்பது இன்னும் புரியவில்லை. அவர்கள் முடக்க வேண்டும் என நினைத்து அனைத்து விஷயங்களும் முறியடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மானியக் கோரிக்கை முடிந்த பிறகு மாலை முதலமைச்சர் விஜய், அனைத்து அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் தனிப்பட்ட முறையில், ‘எந்த தவறும் செய்யக்கூடாது. மக்களுக்காக பணியாற்றி, அவர்களது நம்பிக்கையை பெற வேண்டும். நமது பிரதான வேலை, இனி எந்த ஊழலும் இல்லாமல், மக்களுக்கான பணியை சிறப்பாக செய்ய வேண்டும்’ என மெசேஜ் அனுப்பியிருந்தார்” எனத் தெரிவித்தார்.
