Politics
விதண்டாவாதம் பேசாமல் பதில் சொல்லுங்கள்: உதயநிதி ஆவேசம்

''பதில் சொல்ல வேண்டிய இடத்தில் த.வெ.க., அரசு இருக்கிறது. எனவே, நான் கேட்ட கேள்விகளுக்கு, விதண்டாவாதமாக பேசாமல், முதல்வர் விஜய் நேரடியாக பதிலளிக்க வேண்டும்,'' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசினார்.
த.வெ.க., அரசு பொறுப்பேற்று, 116 நாட்களில், பெயர் மாற்ற அறிவிப்பும், திட்டங்களை கைவிட்ட அறிவிப்பும் தான் அதிகமாக வந்துள்ளன.
'தாய் மாமன் சீர் திட்டம், தாய் மாமன் தங்க மோதிரம்' என, திட்டங்களுக்கு பெயர் வைத்துள்ளீர்கள். மொத்தமாக, 'தாய் மாமன் காது குத்தும் திட்டம்' என, பெயர் வைப்பதே பொருத்தமாக இருக்கும்.
கடந்த, 116 நாள், த.வெ.க., ஆட்சியில், 200 கொலைகள், 300 பாலியல் வன் கொடுமை சம்பவங்கள், 10 ஆணவப் படுகொலைகள், 8 காவல் மரணங்கள் உட்பட, 550 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
த.வெ.க., அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அரசு, முதல்வர் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த பா.ஜ., தலைவர் மீது வழக்கு பதியவில்லை. பா.ஜ., அடித்தாலும், வலிக்காதது போல இருக்கிறது த.வெ.க., அரசு.
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வுக்கு எதிராக, நாடு முழுதும் போராட்டங்கள் நடந்தபோதும், சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. மெரினா கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு, த.வெ.க., அரசுதான்.
சட்டம் -- ஒழுங்கு பிரச்னைகளால், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அரசை நோக்கி கேள்வி கேட்கும் இடத்தில், தி.மு.க., இருக்கிறது.
பதில் சொல்ல வேண்டிய இடத்தில் த.வெ.க., அரசு இருக்கிறது. எனவே, நான் கேட்ட கேள்விகளுக்கு, விதண்டாவாதமாக பேசாமல், முதல்வர் விஜய் நேரடியாக பதிலளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.