Politics
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 59% நிறைவு : ஜன.1 முதல் வெளிநோயாளிகள் பிரிவு செயல்படும்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் செயல்படும். கட்டுமானப் பணிகள் 59% நிறைவடைந்துள்ளன.
அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூர் பகுதியில் நடைபெற்று வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணியை விரைவுபடுத்தி காலக்கெடுவுக்குள் முடிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரி தலைமையிலான அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை துணை இயக்குநர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருவதாகவும், மாணவர்கள் விடுதி, உணவு கூடம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் 88 சதவீதம் நிறைவடைந்த நிலையில்,
மருத்துவமனை கட்டுமானம் உள்ளிட்ட இரண்டாம் கட்ட பணிகள் 35 சதவீதம் என ஒட்டுமொத்தமாக 59 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெங்கு சிகிச்சை: “கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை” - உதவி எண்ணை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
