Politics
மதுரை 'எய்ம்ஸ்'சில் ஜன., 1 முதல் சிகிச்சை
மதுரை: 'மதுரை, தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில், வெளிநோயாளிகளுக்கு, 2027 ஜன., 1 முதல் சிகிச்சை அளிக்கப்படும்' என, மத்திய அரசு தரப்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை, நரசிங்காபுரம் பாஸ்கர், 'தோப்பூரில் குறித்த காலவரம்பிற்குள் எய்ம்ஸ் கட்டுமான பணியை விரைந்து மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அமர்வு விசாரித்தது.
மத்திய அரசு தரப்பில், வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜராகி, எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்த அறிக்கை: மதுரை எய்ம்ஸ் வளாகத்தில், விடுதிகள் மற்றும் உணவுக்கூட கட்டடங்களின் கட்டுமான பணி நிறைவடைந்தது. எய்ம்ஸ் வளாக வெளிநோயாளிகள் பிரிவு கட்டடத்தில், வெளிநோயாளிகளுக்கு முழுமையான மருத்துவ சேவைகள், 2027 ஜன., 1 முதல் தொடங்க உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.