Politics
லஞ்சப்பணத்தில் ஸ்டாலின், உதயநிதி பலன் பெற்றனர்!: சட்டசபையில் போட்டுடைத்தார் முதல்வர் விஜய்

சென்னை: திமுக ஆட்சியில் இருந்த போது 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி வாங்கியிருக்கிறார்கள் என்று அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பயனாளர்கள் அப்போதைய முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்று அதில் உள்ளது என்று முதல்வர் விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.
சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியதாவது: கட்சி நிதி என்று சொன்ன போது, ஆதாரம் கேட்டார்கள். ஆதாரம் பக்கத்திலேயே இருக்கிறது. அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையை பாருங்கள் திமுக ஆட்சியில் இருந்தபோதே வழங்கப்பட்ட ஆவணத்திலும் கட்சி நிதி தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஆவணத்தில் முறைகேடுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் நாங்கள் தலையிடவில்லை. அது குறித்து எந்தக் கருத்தையும் நாங்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், கட்சி நிதி தொடர்பான ஆதாரம் வேண்டும் என கேட்கிறார்கள். அதனால் தான் அமலாக்கத்துறை அறிக்கையை சுட்டிக் காட்டுகிறோம்.
அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ள அந்த ஆவணத்தில் ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒப்பந்த தொகையை குறிப்பிட்ட சதவீதத்தை வழங்க வேண்டும் என்றுகூறி அந்த பணம் கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட துறைகளின் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கட்சி நிதி என்ற பெயரில் வசூலிக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த கட்சி நிதி ஆளுங்கட்சியின் நலனுக்காகவும், தமிழக அரசை நடத்தும் கட்சியின் நலனுக்காகவும், வசூலிக்கப்பட்டதாக அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. அதில் கட்சி நிதியின் நேரடி பயனாளிகள் முதல்வர் ஸ்டாலின், அவரது மகனும் துணை முதல்வருமான உதயநிதிமற்றும் மேலும்பலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் வசூலித்ததாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு துறை தொடர்பான விவகாரம் மட்டும் அல்ல. மற்றொரு துறை தொடர்பாகவும் அமலாக்கத்துறை பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளது. அந்தந்த துறைக்கு யார் அமைச்சராக இருந்தார்கள், பின்னர் யார் அமைச்சராக மாற்றப்பட்டார்கள் என்பது அவர்களது பிரச்னை. அதற்கும் நாம் செல்ல வேண்டியதில்லை.
அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆதாரம் எங்கே என்று கேட்கிறார்கள். பக்கத்திலேயே இருக்கிறது. அமலாக்கத்துறை ஆவணத்திலேயே இருக்கிறது. டாஸ்மாக் துறை அமைச்சரும் அவருடன் ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சில அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சில தனிநபர்கள் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறிப்பாக ரத்தீஷ் என்பவர் பல அதிகாரிகளின் குறிப்பாக டிஆர்ஓ நிலையிலான அதிகாரிகளின் பணியிட மாற்றங்களை முடிவு செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அவரை பற்றி குறிப்பிடும்போது ' Central Figure, Operating as an unauthorised power broker' என்று அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. இந்த ரத்தீஷ் யார்? யாருக்கு நெருக்கமானவர்? திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவர் எத்தனை அதிகாரிகளின் பணியிட மாற்றங்களில் தலையிட்டுள்ளார். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.