Religion
விநாயகர் சிலையை 10 அடி உயரத்துக்குள் வைக்க மட்டுமே அனுமதி: கலெக்டர்
கரூர்:''விநாயகர் சிலைகளை, 10 அடி உயரத்துக்குள் வைக்க மட்டுமே அனுமதி,'' என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர்
முத்துக்குமரன் பேசியதாவது: விநாயகர் சிலை அமைக்கப்படும் இடம், தனியார் நிலம் எனில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் தடையின்மை சான்று, அரசு பொது இடங்களில் நிறுவப்படும் சிலைகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அல்லது தேசிய நெடுஞ்சாலை துறையினரிடம் தடையின்மை சான்று பெற வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் தடையின்மை சான்று அவசியம் தேவை.
வழிபாட்டுக்குவிநாயகர் மட்டுமேகளிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித ரசாயன கலவை இல்லாத சுற்றுச்சூழுலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட, விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட மாசு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற பொருள்களால் ஆன சிலைகளை நிறுவக்கூடாது. நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நிறுவ வேண்டும். சிலைகளின் அடிப்பாகம் மற்றும் மேடை உள்பட மொத்தமாக சேர்ந்து, 10 அடி உயரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பிற மதம் சார்ந்த இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு அருகில் சிலைகள் அமைக்கக் கூடாது. ஒலிபெருக்கிகள் காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் பூஜை நடைபெறும் நேரங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சி மற்றும் பிற சமூக தலைவர்களை ஆதரித்து பதாகைகள் வைக்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா உள்பட பலர் பங்கேற்றனர்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
