Politics
சைகையால் சர்ச்சை உள்நோக்கமில்லை: முதல்வர் விஜய் விளக்கம்

சென்னை: 'சட்டசபையில் பேசியபோது, என் உடல் மொழி எதேச்சையாக வெளிப்பட்டது; அதில் உள்நோக்கம் இல்லை' என, முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில், நேற்று முன்தினம் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின்போது, தி.மு.க., மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை முதல்வர் விஜய் முன்வைத்தார்.
அப்போது, 'மிசா' தொடர்பாக பேசுகையில், தன் தாடையை தட்டி சைகை செய்தார். இது, சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. 'மிசா' காலத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், காவல் துறையால் தாக்கப்பட்டு, அவரது தாடை உடைக்கப்பட்டதை விஜய் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், முதல்வர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'சட்டசபையில், கடந்த 7ம் தேதி, காவல் துறை மானியக் கோரிக்கையில், என் பதிலுரையின்போது, என் உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது தானே தவிர, எந்த வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை.
'தனிப்பட்ட முறையில், யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக, அதை அர்த்தம் கொள்ள வேண்டாம்,' என தெரிவித்து உள்ளார்.