வாழை இலை ஒரு கட்டு ரூ.3 ஆயிரம்
திருப்பாச்சேத்தி,செப்.12- திருப்பாச்சேத்தியில் நேற்று ஒரு கட்டு வாழை இலை மூவாயிரம் ருபாய் என விற்பனை
திருப்பாச்சேத்தியில் நேற்று ஒரு கட்டு வாழை இலை மூவாயிரம் ருபாய் என விற்பனை செய்யப்பட்டது.
மற்ற பகுதிகளில் வாழை விளைச்சல் பாதிப்பிற்குள்ளானதால் வியாபாரிகள் பலரும் திருப்பாச்சேத்திக்கு இலை வாங்க வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் 867.14 ஏக்கரில் நாட்டு வாழை, ஒட்டு வாழை, கற்பூரம் , ரஸ்தாளி உள்ளிட்ட வாழை ரகங்கள் கலியாந்தூர், கானுார், திருப்பாச்சேத்தி, கல்லூரணி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படுகிறது.
விவசாயிகள் பெரும்பாலும் முகூர்த்த நாட்களை கணக்கிட்டே வாழை பயிரிடுகின்றனர். வாழை பயிரிட்ட 10 வது மாதத்தில் இருந்து பக்க கன்று மூலம் சுழற்சி முறையில் இலை அறுவடை நடைபெறும். ஏக்கருக்கு 4 முதல் 8 கட்டு (200 இலைகள்) வரை இலை கிடைக்கும். திருப்பாச்சேத்தி பகுதி இலை பெரியதாக இருப்பதால் அவற்றை காலை உணவு , மதிய உணவு ஆகியவற்றிற்கு ஏதுவாக பயன்படுத்தி கொள்ளலாம் என்பதால் விரும்பி வாங்குவார்கள்.
முகூர்த்த நாட்கள் அதிகம் இருப்பதால் கடந்த ஒரு மாதமாக ஒரு கட்டு 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. வரும் திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் வாழை இலை விலை நேற்று 3 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.
எல் நினோ தாக்கம் காரணமாக வெப்பம் அதிகரித்ததால் இலை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏக்கருக்கு எட்டு கட்டு கிடைத்து வந்த நிலையில் அதிகபட்சமாக இரண்டு கட்டுகளே கிடைப்பதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருப்பாச்சேத்தி வாழை மார்க்கெட்டில் தினசரி 60 கட்டுகள் வரை வரத்து இருந்த நிலையில் தற்போது பத்து கட்டுகளே வருவதால் விலை உயர்ந்துள்ளது. மதுரை மார்க்கெட்டிலும் வாழை இலைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் வியாபாரிகள் திருப்பாச்சேத்திக்கு இலை வாங்க குவிந்து வருகின்றனர்.
மழை பெய்தால் மட்டுமே விளைச்சல் அதிகரிக்கும், இல்லாவிட்டால் இலைகளுக்கு அடுத்தடுத்து வரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை மேலும் அதிகரிக்கும், என்றனர்.

