Politics
டில்லி விடுதி விபத்து குத்தகைதாரர் ‘சரண்’
புதுடில்லி: டில்லியில், ஹாஸ்டல் கட்டடம் இடிந்த விழுந்த விபத்தில், ஏழு பேர் பலியான சம்பவத்தில், தலைமறைவாக இருந்த விடுதி குத்தகைதாரர் சுபம் தியாகியின் முன்ஜாமின் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நீதிமன்றத்தில் நேற்று அவர் சரணடைந்தார்.
டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள சத்யா நிகேதனில், ‘ஹேப்பி டேஸ்’ என்ற ஐந்து மாடி தங்கும் விடுதி கட்டடம் இயங்கி வந்தது. இதில் சில நாட்களாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த 6ல், திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில், அங்கு தங்கியிருந்த ஐந்து மாணவர்கள், இரண்டு தொழிலாளர்கள் என, மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக கட்டட உரிமையாளர் ஹரிராம் குப்தா, அவரது மனைவி ஊர்மிளா, மகன் மகேஷ், விடுதி குத்தகைதாரர் சுதான்ஷூ லவ்னீஷ், கட்டுமான ஒப்பந்ததாரர் சனோஜ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், விடுதியில் உள்ள ஒரு தளத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த சுபம் தியாகி என்பவர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையே, முன்ஜாமின் கோரி டில்லி நீதிமன்றத்தில் சுபம் தியாகி மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நேற்று அவர் டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.