Politics
டெல்லியில் பெரும் கட்டட விபத்து; தரைமட்டமான 4 மாடி விடுதி இடிபாடுகளில் சிக்கியிருக்கும் 50 பேரின் நிலை?

டெல்லி சத்யா நிகேதன் பகுதியில் 4 மாடி விடுதி இடிந்து விழுந்தது.
டெல்லி சத்யா நிகேதன் பகுதியில் நான்கு மாடி கட்டடம் இடிந்துவிழுந்த விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சத்யா நிகேதன் பகுதியில், டெல்லி பல்கலைக்கழகத்தின் சௌத் கேம்பஸ் அருகே அமைந்துள்ள ஒரு நான்கு மாடி கட்டடம் இன்று பிற்பகல் சுமார் 1.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. பல்கலைக்கழகம் அருகே அமைந்திருக்கும் இந்த கட்டடம் சிறு மாணவர் விடுதியாகவும் செயல்பட்டுவந்தது.
இதில், மாணவர்கள் பலர் தங்கியிருந்த சூழலில் தற்போது இடிபாடுகளில் சுமார் 15 மாணவர்கள் வரை சிக்கியிருக்கலாம் எனவும், இதனைத் தவிர்த்து மற்ற ஏராளமானோரும் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
மீட்புப் பணி சிக்கலாக இருந்துவருவதால், தீயணைப்புத் துறையினருடன், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இந்தக் கட்டடத்தில் 15 மாணவர்கள் உட்பட சுமார் 40 முதல் 50 பேர் வரை சிக்கியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
தற்போதுவரை ஏழு பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மூன்று மாணவர்கள் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீயணைப்புத் துறையினரும், மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக தொடர் கன மழை பெய்துவந்தச் சூழலில், அதன் காரணமாக இந்தக் கட்டட விபத்து ஏற்பட்டதா அல்லது இந்த விபத்துக்கு வேறு ஏதேனும் காரணமா என பல கோணங்களில் காவல்துறையினரும் விசாரித்துவருகின்றனர்.
