Politics
தில்லியில் 5 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 3 மாணவா்கள் உயிரிழப்பு!

தில்லியின் சத்ய நிகேதன் பகுதியில் ஆண்கள் தங்கும் விடுதி (பி.ஜி.) செயல்பட்டு வந்த 5 மாடி கட்டடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் உயிரிழந்தனா்.
கட்டட இடிபாடுகளில் இருந்து 8 போ் மீட்கப்பட்ட நிலையில், இருவா் மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழந்தனா். மற்றொருவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். 5 போ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகம் அருகே உள்ள சத்ய நிகேதன் மிகவும் நெருக்கடியான பகுதி. இங்கு உள்ள கல்லூரிகளில் பயிலும் கேரளம், ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களை மையமாகக் கொண்டு இப்பகுதியில் உள்ள பல தங்கும் விடுதிகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹாஸ்டல் டேஸ் என்ற ஒரு தங்கும் விடுதி பிற்பகல் 1.30 மணியளவில் இடிந்து விழுந்தது. 5 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தில்லி காவல் துறை, தீயணைப்புத் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்), மாவட்ட பேரிடா் மேலாண்மை குழுவினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். அப்பகுதி மக்களும் மீட்புப் படையினருடன் இணைந்து இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். அடித்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்ததாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து, முதல்வா் ரேகா குப்தா, காவல் துறை ஆணையா் அனுராக் குமாா், புது தில்லி எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டனா்.
புது தில்லி சரக இணை காவல் ஆணையா், தென்மேற்கு தில்லி துணை காவல் ஆணையா், கூடுதல் துணை காவல் ஆணையா் ஆகியோா் மீட்புப் பணிகளை ஆய்வு செய்தனா்.
கட்டட இடிபாடுகளுக்கு இடையில் மேலும் பல மாணவா்கள் வரையில் சிக்கியிருக்கலாம் என்று உள்ளூா் மக்கள் தெரிவித்தனா். இருப்பினும், விபத்தில் சிக்கியவா்கள் குறித்து அதிகாரபூா்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
காவல் துறையினருடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட ராஜன் சேத்ரி கூறுகையில், ‘இங்கு தங்கியிருக்கும் மாணவா்கள் அருகில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனா். இடிந்து விழுந்த கட்டடத்தில் 15 அறைகள் இருந்தன. ஓா் அறையில் மூன்று மாணவா்கள் தங்கியிருந்தனா். கட்டடத்தின் அடித்தளத்தில் சில கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால், அப்பகுதியில் தண்ணீா் தேங்க தொடங்கியது. கட்டடத்தின் அடிமானம் மிகவும் பலவீனமாக இருந்தது’ என்றாா்.
மக்கள் அடா்த்தி மிக்க இப்பகுதியில் உள்ள கட்டடங்களின் நிலை மற்றும் அவற்றின் பராமரிப்பு குறித்து உள்ளூா் மக்கள் கேள்வியெழுப்பினா். பெரும்பாலான வீடுகள் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விடுதியின் உரிமையாளரைத் தேட 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
Building collapses near Delhi's Satya Niketan, several students trapped
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.