Religion
14ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா: சிலைகள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஹிந்து முன்னணி சார்பில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
வரும் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஹிந்து முன்னணி சார்பில், திருப்பூர் அலகுமலை மற்றும் கொடுவாய் வஞ்சிபாளையத்தில் சிலைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் 5,100 சிலைகளும், மாநகரில் 1,008 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.
ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் கூறுகையில், ''மாவட்டம் முழுவதும் சிலைகள் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது; திருப்பூர் மாநகரில் வரும், 17ம் தேதியும், அவிநாசி, உடுமலை, பல்லடத்தில் 16 ம் தேதியும், ஊத்துக்குளி, குண்டடம், காங்கயம், குன்னத்துாரில், 15ம் தேதியும் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது,'' என்றார்.