Religion
விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் களிமண் சிலைகள்

கும்மிடிப்பூண்டி:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி அருகே பெரிய அளவிலான களிமண் சிலைகள் தயாரிப்பில், மேற்கு வங்க மாநிலத்தவர் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மாதம், 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதால், அந்தந்த பகுதியை சேர்ந்த விழா குழுவினர், பொது இடங்களில், பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தயாராகி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் விழா குழுவினர் அதிகரித்து வருவதால், பெரிய அளவிலான விநாயகர் சிலைகளுக்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
'நீர்நிலைகளில் கரைக்கப்படும் சிலைகளால், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மீறினால் சிலைகள் பறிமுதல் செய்யப்படும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால், கும்மிடிப்பூண்டி அருகே சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், பெரிய அளவிலான களிமண் சிலைகள் தயாரிக்கும் வேலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
கவரைப்பேட்டை அடுத்த அய்யர்கண்டிகை கிராமத்தில், தனியார் நிலத்தை தரை வாடகைக்கு எடுத்து, 4 அடி முதல், 12 அடி உயரம் உள்ள பலவிதமான விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.
களிமண், வைக்கோல், விறகு, மரப்பலகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டு வரும் சிலைகள், 10 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும் என, தெரிவிக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், முன்பணம் செலுத்தி, அவர்களுக்கு பிடித்த விநாயகர் சிலைகளை 'ஆர்டர்' செய்துள்ளனர். குறிப்பாக, தமிழக முதல்வர் விஜயின் பிரபலமான ஸ்டைல்களில், விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.