வறட்சி எதிரொலி!: மலை காய்கறி தோட்டத்துக்கு லாரிகளில் தண்ணீர்; மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜை

கோத்தகிரி: -: கோத்தகிரி புறநகர் பகுதிகளில் வறட்சி அதிகரித்துள்ளதால், விவசாய பயிர்களுக்கு, லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று பாய்ச்ச வேண்டிய நிலை உள்ளது.
நீலகிரியில், கடந்த மே மாதம் முதல் வாரத்தில் பெய்த ஓரிரு மழையை தவிர, வறட்சி தொடர்கிறது. இது தவிர, 'எல் நினோ' தாக்கம் காரணமாக, கடுமையான வறட்சி நீடிக்கிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, ஊட்டி, கோத்தகிரி பகுதியில், ஒன்றரை மணி நேரம் கன மழை பெய்தது. பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அந்த மழை கிராமப்புறங்களில் பெய்யவில்லை. கிராமப்புற விவசாயிகள், பல நுாறு ஏக்கர் பரப்பளவில் உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், பீன்ஸ், பீட்ரூட் மற்றும் முள்ளங்கி போன்ற மலை காய்கறி பயிரிட்டுள்ளனர்.
வாட்டம் கண்ட பயிர்கள் அந்தந்த பகுதிகளில் ஓடும் நீரோடைகள் முழுவதுமாக வற்றியுள்ளன. இதனால், தண்ணீர் பாய்ச்ச முடியாமல், பயிர்கள் வாட்டம் கண்டுள்ளன. மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல கிராமப்புறங்களில் மழை வேண்டி வருண பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பயிர் செய்வதற்காக தோட்டத்திற்கு செலவிட்ட முதலீடு கிடைத்தால் போதும் என்ற நிலையில், விவசாயிகள் நீர் ஆதாரமுள்ள ஓடைகளில் இருந்து, 'மோட்டார் பம்ப்' உதவியுடன், லாரிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை நிரப்பி, தோட்டத்திற்கு சென்று தண்ணீர் பாய்ச்ச வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
மழைக்காக காத்திருப்பு குறிப்பாக, குருவேனு ஹள்ளா நீர் பிடிப்பு பகுதிகளான பனஹட்டி மற்றும் குடிமனை நீர் ஓடைகளில் இருந்து, நாளொன்றுக்கு, பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் ஒரலார் அண்ணி மற்றும் கனாக்கம்பை பகுதியை சேர்ந்த விவசாயிகள் தண்ணீர் கொண்டு சென்று பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். எனினும், மழை பெய்தால் மட்டுமே தீர்வு என்ற நிலையில், விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.
மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில்,'' காலநிலை மாற்றம் காரணமாக, கிராமப்புறங்களில் குடிநீருக்கு கூட தட்டுபாடு அதிகரித்துள்ளது.
இதனால், பல ஏக்கர் பரப்பளவில் மழை காய்கறி பயிர்கள் வாடி வருகின்றன. பயிர்கள் செழித்து வளர்வதற்கு வாய்ப்பு இல்லாமல் வாடி வருகின்றன. காய்கறி விவசாயிகளுக்கு இழப்பு அதிகரித்துள்ளது. மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.